25 ஜனவரி, 2011

வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஏப்ரல் வரையிலும் நீடிப்பு

கலைக்கப்பட்ட 301 சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக்காலத்தை ஏப்ரல் வரையிலும் நீடிப்பதற்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வடக்கில் 26 பிரதேச சபைகளின் பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தெற்கு, வடமாராட்சி தென் மேல், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென் மேல், நெடுந்தீவு, வேலணை, வலிகாமம், ஊர்காவற்றுறை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி, வவுனியா தெற்கு தமிழ், வவுனியா தெற்கு சிங்கள, வவுனியா வடக்கு, வெங்கல்செட்டிக்குளம், கராச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கடற்றுறைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பிரதேச சபைகளின் பதவிக்காலமே 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்கலாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 267 சபைகளின் ஆட்சிகாலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்சிக்காலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கான தேர்தலும் இம்முறை நடைபெறவுள்ளது.

இதன்படி 301 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை மீதமாகவுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னர் இடம்பெறும். இவற்றுள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

அதேநேரம் நாட்டிலுள்ள 18 மாநகரசபைகள் தேர்தலுக்காக கலைக்கப்படவில்லை என்பதுடன் வடக்கில் 26 மன்றங்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக