25 ஜனவரி, 2011

முல்லைத்தீவில் ஐ.ம.சு.முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாது


புத்திஜீவிகள் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று சிறிரங்காவின் கட்சிக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவ தில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரஜைகள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. சிறிரங்காவை ஆதரிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், பொதுமக்களும் சமீபத்தில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த ஆகியோரை நேரில் சந்தித்தனர்.

யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சிறிரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர்.

இவ்வேண்டுகோளுக்கு செவிமடுத்த இவ்விரு சிரேஷ்ட அமைச்சர்களும் முல்லைத்தீவு மக்களுக்கு தங்கள் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் முகமாகவும் பிரஜைகள் முன்னணிக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் தாங்கள் இம்மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று உறுதியளித்துள்ளனர்.

சிறிரங்கா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அணியில் தொடர்ந்தும் அமர்ந்திருக்கின்ற போதும் அரசியல் சாசனத்திற்கான 18 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகிய முல்லைத்தீவு மக்களின் நல்லெண்ணத்திற்கும், அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கும் முகமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் பிரஜைகள் முன்னணிக்கு தனது நல்லெண்ணத்தைக் காட்டும் முகமாக ஆதரவளிக்க முன்வந்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக சிறிரங்கா எமது நிருபரிடம் தெரிவித்துள்ளார். பிரஜைகள் முன்னணி முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பஸ் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் புனர்வாழ்வு புனர்நிர்மாண நடடிவக்கைகளுக்கும் மக்களுக்கு செய்துவரும் நலன்புரி சமூகப் பணிகளுக்கும் சிறிரங்கா தன்னுடைய முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக