10 ஜனவரி, 2011

வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி: கண்டியில் சம்பவம், மீட்பு பணியில் இராணுவத்தினர்

கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் வினோத் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கற்பாறைக்குள் சிக்குண்டுள்ள ஏனைய ஐந்து பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வெடி மருந்துகளை பயன்படுத்தி கற்பாறையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக