23 டிசம்பர், 2010

அரசை வீழ்த்த முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

தேர்தல்கள் மூலம் தோல்விகளை அனுபவிக்கும் கட்சிகள், அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு சிறந்த பணிகளுக்கு குழப்பம் விளைவிப்பதையோ அல்லது குறித்த அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென அஸ்கிரிய மகாநாயக்க சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் நேற்று (22) தெரிவித்தார்.

ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பொன்றின்போது அஸ்கிரிய தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சிகளுக்கிடையிலான போட்டிகளும் பொறாமைகளும் தேர்தல் காலங்களில் மாத்திரம் அன்று வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனைய காலங்களில் அரசுடன் இணைந்து நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தமது பூரண ஆதரவுகளை நல்க வேண்டும். அரசின் நல்ல சிறந்த விடயங்களை ஆதரிக்க வேண்டும். அதுபோன்று அரசினால் ஏதும் தவறுகள், பிழைகள் முன்னெடுக்கப்படுமிடத்து அதனை சுட்டிக்காட்டி திருத்துவதற்கான ஆலோசனைகளைக் கூற வேண்டும்.

ஐ.தே. க எம்.பி. சஜித் பிரேமதாசவினது நேற்றைய கண்டி விஜயத்தின்போது மல்வத்த மகாநாயக்க சங்கைக்குரிய திப்பிட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்தவேளை தெரிவித்ததாவது:-

இனம், மதம், நிரம், கட்சி போன்ற பேதங்களை மறந்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கும் பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன அவசிய தேவைகளை உணர்ந்து தாம் பூரண ஒத்துழைப்புகளை அரசுக்கு வழங்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது. அரசு முன்னெடுத்துவரும் அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்காமல் நல்ல விடயங்களுக்கு எதிர்க் கட்சியினர் தமது ஆதரவுகளை காட்டவேண்டும்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் கட்சியொன்று அவசியமில்லை. வடக்கு, கிழக்கு மக்களையும் நாம் இணைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பணிகளை கட்சி பேதமின்றி ஒன்றிணைத்து செயற்படுத்த முன்வரவேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மத்திய மாகாண சபை உறுப்பினர் சானக்க அயிலப்பெரும கம்பளை நகர பிதா காமினி ஹெட்டியாராச்சி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக