23 டிசம்பர், 2010

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்புக்கு ஜப்பான் முதலீடு

பாராளுமன்ற பிரதிநிதிகள் நிலைமையை நேரில் ஆராய்வு
வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யவுள்ளன.

இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழலை எடுத்துரைத்து ஜப்பானிய கம்பனிகளின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதாக ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்தது.

ஜப்பான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற ஒன்றியத்தின் சார்பில் இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே நேற்று (22) இதனைத்தெரிவித்தது.

ஜப்பானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹிரோபியுமி ஹிரானோ தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட குழு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த இந்தக் குழு நேற்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையின் முதலீட்டுத் துறை தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் வடக்கு, கிழக்கின் உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் கூறிய ஹிரானோ, கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் தற்போதைய சுமுக உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது விஜயத்தின் நோக்கமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜப்பானின் புதிய முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள தாகவும் சுற்றுலாத் துறை, கைத்தொழில் துறை ஆகியவற்றில் கூடுதல் முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார். இந்த வருடம் ஆறு இலட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்ததாகவும் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாகவே எதிர்பார்த்த இலக்கை அடைந்துவிட்டதாக வும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் யாப்பா, அடுத்த ஆண்டு ஏழு இலட்சம் பேரை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஆசியாவின் சிறந்த முதலீட்டு மையமாக இலங்கை விளங்குவதால் ஜப்பானிய கம்பனிகள் கூடுதலான முதலீடுகளைச் செய்யுமெனத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட எந்தப் பாகத்திற் கும் ஜப்பானிய பிரஜைகள் செல்ல முடியும் என அனுமதி வழங்கப்பட்டு ள்ளதா கவும் அவர் குறிப்பிட்டார்.நேற்றைய நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கொய்னோ டக்காஷியும் கலந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக