1 செப்டம்பர், 2010

இந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்






இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, அரசு தனது தேவைக்காகத் தமது காணிகளை எடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தடுத்து, தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர் நடைபெற்ற வேளையிலும், போருக்குப் பிந்திய வேளையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதி இந்திய அரசு எடுத்திருக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறப்போம்

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நடந்து முடிந்தவற்றை மறந்து, இனிமேல் நடக்க வேண்டிய விடயங்களில் இணைந்து செயலாற்றுவோம் என பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி, இந்துபுரம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை அரசு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இதனைத் தவிர்த்து தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்வதற்கு உதவ வேண்டும் என இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமைப் பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்த இந்திய வெளியுறவுச் செயலர் தலைமையிலான இந்தியக் குழுவினர், ஓமந்தை பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

பிறகு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட நிருபமாராவ், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அவற்றில் ரயில் பாதைகளை அமைத்தல், அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுத்தல், வாழ்வாதார உதவிகளை வழங்குதல் என்பன முக்கியமானவை என தெரிவித்துள்ளதுடன். இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக