இந்தியப் பெருங்கடலில் இருக்கும் அமெரிக்க விமானம்தாங்கி கப்பல்
இந்தியப் பெருங்கடலில் சீனா அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டத் துவங்கியிருப்பதை இந்தியா தற்போது உணர்ந்திரு்பபதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு கொண்டுவந்த கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கிருஷ்ணா இந்தத் கருத்தைத் தெரிவித்தார்.
கடந்த 2000-வது ஆண்டு முதல் இதுவரை 206 முறை இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியதில், 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பாலு சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்தி திரும்பப் பெறவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல் படை ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், இலங்கை, இந்திய அரசுகள், தமிழக அரசு மற்றும் மீனவ்ர்களுக்கிடையே நேரடி தொடர்பு வசதியை ஏற்படுத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயலவேண்டும் என்றும் டி.ஆர். பாலு கோரினார்.
அதிமுக உறுப்பினர் தம்பிதுரை உள்பட தமிழகத்தின் பிற கட்சி உறுப்பினர்களும் இப் பிரச்சினையை எழுப்பினார்கள். தம்பிதுரை பேசும்போது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பேசும்போது, இந்தியப் பெருங்கடலில், சீனா அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருவதை இந்திய அரசு உணர்ந்திருப்பாககத் தெரிவித்தார். சீனாவின் நோக்கத்தை நுணுக்கமாகக் கண்காணிப்பதாகவும், இந்தியப் பெருங்கடலில் நடக்கும் மாற்றங்களையும் கண்காணித்து வருவதாகவும் கிரு்ஷ்ணா தெரிவி்ததார். இந்தியாவின் எல்லையைப் பாதுகாக்கவும், இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், கச்சத்தீவுப் பிரச்சினையைப் பொருத்தவரை, இரு நாடுகளுக்கு்ம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அது இலங்கை அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கிருஷ்ணா தெரிவித்தார்.
அதே நேரத்தில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலர் தற்போது இலங்கையில் உள்ள நிலையில், இந்தப் பிரச்சினையையும் இலங்கை அரசிடம் எடுத்துச் செல்வார் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக