19 ஆகஸ்ட், 2010

போதைப்பொருள் பாவனை, கடத்தல் தொடர்பாக 23,300 வழக்குகள் ரூ.850 இலட்சம் தண்டப்பணம் அறவீடு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்


போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் ஜுலை மாதம் வரையில் 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்குகள் மூலம் 850 இலட்சம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டிருப்ப தாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதற்கு இங்குள்ளவர்களின் உதவி, ஒத்துழைப்பும் உள்ளன. அதனால் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளிலும், சீனாவிலும் இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

போதையூட்டும் ஒளடதங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் அவற்றின் பாவனையில் தங்கியுள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பது தொடர்பான கட்டளையின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்ட விரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக 2009ம் ஆண்டில் 45 ஆயிரத்து 935 தேடுதல்கள் நடாத்தப்பட்டன.

இவற்றில் 45 ஆயிரத்து 738 குற்றச் செயல்கள் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இச்செயலில் ஈடுபட்ட 730 ஆண்களும், 73 பெண்களும் கைது செய்யப்ப ட்டனர்.

இவர்களில் 641 பேர் ஹெரோய்ன் தொடர்பான குற்றச் செயல்களிலும் 160 பேர் கஞ்சா தொடர்பான குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள்.

வருடத்திற்கு ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 161 லீட்டர் மதுசாரம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இவற்றில் பெரும் பகுதி சட்ட விரோத மது உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றது.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையும் சட்ட விரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, கடத்தல் தொடர்பாக 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டு இவற்றின் மூலம் 850 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளன.

இக்காலப் பகுதியில் கெனபஸ் 12 ஆயிரத்து 335 கிலோ கிராம், ஹெரோய்ன் 95 கிலோ கிராம், டேபைன் 25 கிலோ கிராம், ஹகூஸ் 9 கிலோ கிராம், கொக்கைன் 3 கிலோ கிராம் என்றபடி போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளன. இச்செயலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக