19 ஆகஸ்ட், 2010

ஜெனரல் பதவியைப் பறித்தமை குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல் : ஜயலத்

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கைகளினால் வழங்கிய ஜெனரல் பதவியை சரத் பொன்சேகாவிடமிருந்து பறித்தெடுத்திருப்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும் என்று ஐ. தே. க. எம். பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன குற்றஞ்சாட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

"முப்பது வருட கால பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் ஜெனரல் சரத் பொன்சேகா. இதனால் குண்டுத் தாக்குதலக்கும் உள்ளாகி செத்துப் பிழைத்த மனிதர்.

நாட்டுக்கு வழங்கிய சேவையை கௌரவித்து மகாசங்கத்தினர் உட்பட மதத் தலைவர்கள் பல பட்டங்களை வழங்கினார்கள்.

ஜனாதிபதியும் ஜெனரல் பதவி உட்பட பல்வேறு பதவியுயர்வுகளை வழங்கினார். இவ்வாறு வழங்கிய பதவிகளை ஜனாதிபதியே பறித்தெடுத்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தால் வழங்கிய தீர்ப்பை 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திட்டு அங்கீகரித்துள்ளார்.

இது எந்த விதத்தில் நியாயமாகும். இன்று தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவராகவும் கொழும்பு மாவட்டத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிகள் பறிக்கப்பட்டமை அநீதியான செயலாகும்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதோடு அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளார்.

எனவே ஐ. தே. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையுடன் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்" என்றும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம். பி. தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக