26 ஜூலை, 2010

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனு உயர்நீதிமன்றில் புதனன்று விசாரணை





பொலிஸ்மா அதிபர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று குற்றம் சாட்டி பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர்.ஜெயவர்தன உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு எதிர்வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தன சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவுக்கு ஊடாக தாக்கல் செய்த மேற்படி மனுவில், தாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை முடியும் வரை தம்மை கட்டாய லீவில் அனுப்புவது என்ற தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 25ஆம் திகதி தமக்கு இடைக்கால ஆறுதலை வழங்கியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி வேண்டுமென்றே தெரிந்து கொண்டும் விருப்பத்துடனும், தாம் நீதிமன்ற உத்தரவின்படி கடமையை செய்ய வசதியாக தமது உத்தியோகபூர்வ சீருடைகளையும் வாகனத்தையும் தமக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க தவறிவிட்டார் என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்மூலம் பொலிஸ்மா அதிபர் தொடர்ச்சியாக வேண்டுமென்றே நீதிசேவை நடைமுறைகளை தடைப்படுத்தி இடைக்கால தடை உத்தரவை செயல்படாமல் செய்துள்ளார் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் நடத்தை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துவத்தை அலட்சியப்படுத்தவதாகவும் சிறுமைப்படுத்தவதாகவும் உள்ளது என்றும் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியதன் மூலம் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் மனுதாரர் முறைப்பாடு செய்துள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மனுதாரரை கட்டாய லீவில் அனுப்புவது என்று பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் பேரில் தமக்கிடப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதென நீதிமன்றம் மே மாதம் 25ஆம் திகதி அறிவித்திருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிப்பு நடந்தேறுவதை உறுதிப்படுத்துவதில் தாம் வெற்றிகண்ட போதிலும் பாரபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியே தாம் கட்டாய லீவில் அனுப்பப்பட்டதாகவும் மனுதாரர் அவரது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக