சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் சிறு படகுகளில் பொருட்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கு இலங்கை ஆழ்கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வியட்னாமிய நகரான ஹனோயில் நடைபெற்ற 17ஆவது தென்கிழக்காசிய நாடுகள் சங்க பிராந்திய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதி அமைச்சர் குணவர்த்தன, ஆட்கள் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுவதையும் மக்களின் ஒழுங்கீனமான பிரயாணங்களையும் கட்டுப்படுத்த இச்செயல்கள் ஆரம்பிக்கப்படும் நாடுகளும் இடைத்தங்கல் நாடுகளும் இத்தகையோர் சென்றடையும் நாடுகளும் ஒளிவுமறைவற்ற கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரைப்பை கண்காணித்தல் ஆகியன மட்டும் சட்டவிரோத ஆட்கடத்தலையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த போதாது என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாத இயக்கங்கள் எல்லைகளுக்கிடையிலான தொடர்புகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் இலகுவில் பயன்படுத்த வழி சமைப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் பிரதி அமைச்சர் முக்கியமாக எடுத்துக் கூறினார்.
எனவே, சட்டவிரோத புலம்பெயர் குழுக்களினாலும் அனுதாபிகளினாலும் நிதியளித்தல் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகளுக்கிடையிலான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டு நடவடிக்கை இல்லாமல் எந்தவொரு நாடோ பிராந்தியமோ இத்தகைய அச்சுறுத்தல்களிலும் இவற்றுடன் தொடர்புள்ள சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட முடியாது என்று அவர் கூறினார்.
நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை அனுசரித்து நடத்தல், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தேசிய அடையாளம் ஆகியவற்றை பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ள வேண்டியதன் அவசியதையும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக