13 ஏப்ரல், 2010

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படை கப்பல் மூலம் பயிற்சி





இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்தியக் கடற்படை கப்பல் அந்நாட்டுக்கு போய் சேர்ந்தது.

திரிகோணமலை துறை முகத்தை சனிக்கிழமை அடைந்த "ஐஎன்எஸ் மகர்' கப்பலை அந்நாட்டுக் கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கைக் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இந்தியக் கப்பலுக்கும், அதில் சென்ற இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கைக் கடற்படையில் 100 அதிகாரிகள் பயிற்சியில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மகர் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் கடல்வழி தொலைதொடர்பு, எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்படும் நேரத்தில் எவ்வாறு துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்படவுள்ளன.

மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரை அந்நாடு விடுவித்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகும் திரும்ப அளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களை இலங்கை விடுவித்துள்ள நிலையில், அந்நாட்டு மீனவர்கள் 6 பேரை இந்தியாவும் விடுவித்துள்ளது.

குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த 108 புலிகள்: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய 108 பேர் அவர்களது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தனர்.

புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவர்களின் விருப்பம், திறமைக்கு ஏற்ப தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நிறைவடைந்த நிலையில் அவர்கள் அவர்களது குடும்பத்துடன் சேர அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக