16 மார்ச், 2010

மெக்ஸிக்கோவில் அமெ. தூதரகத்துடன் தொடர்புடைய மூவர் சுட்டுக் கொலை





மெக்ஸிக்கோவின் எல்லைப்புற நகரான சியுடாட் ஜூவாரெஸில் அமெரிக்க தூதரகத்துடன் தொடர்புடைய மூவர், போதைவஸ்து கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகப் பெண் ஊழியரும் அவரது கணவரும் பிறிதொரு மெக்ஸிக்கோ பெண் ஊழியரின் கணவருமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேற்படி படுகொலைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோவில் தலைவிரித்தாடும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளை நசுக்க அந்நாட்டு அரசாங்கத்திற்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்படி அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்துத் தான் நடத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸிக்கோவின் எல்லைப் பகுதி நகர்களான திஜுவானா, நொகலெஸ், சியுடர்ட் ஜூவாரெஸ், நுயவோ லாரெடோ, மொன்டெறி மற்றும் மடமோரொஸ் ஆகிய நகர்களில் 6 அமெரிக்க பிரதிநிதி அலுவலகங்கள் இயங்குகின்றன.

மெக்ஸிக்கோவில் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 18,000 பேர் பலியானார்கள். மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் போதைவஸ்து கடத்தல், விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரதான கேந்திர நகர்களில் ஒன்றான சியுடாட் ஜூவாரெஸ் விளங்குகிறது.

கடந்த வருடத்தில் மட்டும் அங்கு போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளில் 2600 பேருக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளையடுத்து சில அமெரிக்க பிரதிநிதி அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களைப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் பெயர் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும் அமெரிக்க தம்பதியின் உறவினர் ஒருவர், 35 வயதான லெஸ்லி என்றிகுயஸ், அவரது கணவர் ஆர்தா ரெடெல்ப் (வயது 34) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களது ஒரு வயது குழந்தை இந்த துப்பாக்கிச் சூட்டில் எதுவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளது.

மெக்ஸிக்கோ ஊழியரின் கணவர் பயணம் செய்த கார் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் பலியானதுடன் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மெக்ஸிக்கோவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அமெரிக்க ராஜாங்க திணைக்களம், அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக