16 மார்ச், 2010

வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும்:கீதாஞ்சலி




வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது என வடக்கு மக்கள் முன்னணியின் தலைவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் வேட்பாளருமான என்.கீதாஞ்சலி தெரிவித்தார்.

விரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு,

நீங்கள் அரசியலுக்கு புதிதாக நுழைந்துள்ளவர் என்ற வகையில், உங்களது அரசியல் நோக்கு எவ்வாறு உள்ளது?
சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்களாக அகிம்சை போராட்டம் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் என வன்னி மண் தொடர்ச்சியான அவலங்களையே சந்தித்தது.நான் கையிலெடுத்திருப்பது அபிவிருத்தி போராட்டம்.இதனை சுயநலன்களுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் என்றுமில்லாத வகையில் தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.இது தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்குமா?
நிச்சயமாக இல்லை.எமது மக்கள் மிகவும் புத்திசாலிகள். எத்தனையோ சங்குகள் உருவாகினாலும் அவை எல்லாவற்றிலும் முத்து இருப்பதில்லையே.முத்துள்ள சங்கை நிச்சயம் இனம் காண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வடக்கு மக்களின் முன்னனி என்ற கட்சியின் உருவாக்கம் மற்றும் செயற்பாட்டு தன்மை தொடர்பாக கூறமுடியுமா?
நிச்சயமாக.எமது கட்சியின் சின்னம் திசைகாட்டி.சிதறி வாழ்கின்ற தமிழ் இனத்தை ஒரு குடையின் கீழ் சேர்த்தலே எனது இலக்கு.

நீங்கள் எவ்வகையான கொள்கைத் திட்டங்களை முன்வைத்து மக்களிடம் செல்கிறீர்கள்?
பசியால் அழுகின்ற பிள்ளைக்கு பாலூட்டுவதே தாயின் முதற் கடமை.இந்த தாயின் கடமையும் அதுவே.
இன்று அவசரமான மனிதாபிமான தேவைகளான மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தல், அவர்களது கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளின் விடுதலையினை துரிதப்படுத்தல்,மறுவாழ்வு, வேலை வாய்பினை பெற்றுக் கொடுத்தல், சகல பீடங்களும் கொண்ட வன்னிக்கான தனிப் பல்கலைக்கழகம், பாடசாலைக்கான அபிவிருத்தி, விதவைகளுக்கான விசேட செயற்திட்டம், காணாமல் போனோர்களின் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல், கைத்தொழில் பேட்டைகளின் உருவாக்கம் வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் போன்றவற்றை இம்மண்ணில் உடனடியாக செயற்படுத்துவேன்.

இன்று சர்வதேச ரீதியாக பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.இது எமது நாட்டுக்கும் பொருத்தமானதா?
ஆம். பெண்களது உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும். ஒரு பெண்ணுடைய பிரச்சினையை இன்னொரு பெண்ணாலேயே புரிந்து கொள்ள முடியும். இன்று பல துறைகளில் பெண் தலைமைத்துவம் காணப்பட்டாலும் அரசியலில் அவர்கள் ஈடுபடுவது குறைவாகவே உள்ளது.
ஆனாலும் எதிர்காலத்தில் இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.இதன் மூலமே பெண்களினுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவம் அதிகரிக்க முடியும்.இதற்கு முன்னுதாரணமாக நான் செயற்படுவேன்.

புனர் வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடினீர்களா?
ஆம். அவர்கள் அனைவரும் நன்னடத்தை அடிப்படையில் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள்.இதனை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதற்காகவும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஊடனமுற்றோர் பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனது தனிப்பட்ட அடிப்படையில் இவர்கள் புனர் வாழ்வுக்குப் பின் கருணை மனு ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.

இறுதியாக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
யுத்தத்தின் கோரத்தால் சின்னாபின்னமான வன்னி மண்ணை ஆளும் கட்சியுடனும் ,மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க்ளது பலமான கரங்களை பற்றியவாறு வசந்த பூமியாக மாற்றுவோம்.
20 பிள்ளைகளோடும் பாழடைந்த வீட்டோடும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் பொறுப்பேற்ற வவுனியா சர்வதேச பாடசாலை இன்று 1500 மாணவர்களோடும் பல மாடி கட்டிடங்களோடும் நிமிர்ந்து நிற்பதை நிஜமாக இன்று மக்கள் பார்க்கின்றார்கள்.
எனவே வன்னி மண்ணின் நம்பிக்கை மிக்க எதிர்காலத்திற்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள். அத்தோடு நான் ஒரு வியாபாரியோ, ஆயுததாரியோ அல்ல உங்களில் ஒருத்தி.போரின் கோரப்பிடியினால் எனது இரத்த உறவுகளை இழந்து எனது அன்பான கணவனை இழந்து நிர்கதியான நிலையிலும் உங்களுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக