16 மார்ச், 2010

ஜி.எஸ்.பி. பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை





இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று கடந்த வார இறுதியில் பிரஸல்ஸுக்குப் புறப்பட்டு அங்கு முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவது பற்றி மீள் பரிசீலனை செய்வதற்கான சாத்தியம் குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

"இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையின் முக்கியத்துவம் பற்றி நாம் உணர்ந்துள்ளோம். .இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் எமக்குக் கிடையாது" என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பேர்ணார்ட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில் சிவில் உரிமைகள், சிறுவர் உரிமைகள், தொழில் உரிமைகள் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சாசனங்களுக்கு முற்றாக உட்பட்டு நடப்பதில் மேலும் முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது என்று சவேஜ் தெரிவித்தார்.

வரிச்சலுகையை நீடிப்பது இந்த விடயங்களுடன் தொடர்புபட்டதே என்று தெரிவித்த சவேஜ் அதனை நீடிக்க வழி ஏற்படுத்தும் வகையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆறு மாதங்களுக்குள் வரிச்சலுகை நிறுத்தப்பட்டுவிடும் என்று கடந்த மாதம் ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருந்ததை அடுத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட இலங்கைத் தூதுக்குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்போது பிரஸல்ஸில் தங்கியுள்ளது.

திறைசேரி செயலாளர் பி.பி.ஜயசுந்தர, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் ஜயசிங்க, நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் ஆகியோரையே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு அனுப்பிவைத்துள்ளது. _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக