14 ஜனவரி, 2010

தாயககுரல்

புதன்கிழமை 13.01.2010

வடக்கு கிழக்கில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்னர் குடாநாட்டில் தேர்தல் பிராச்சாரங்கள் சுதந்திரமாக மேற்கொள்ள முடிவதால் ஜனாதிபதி வேட்பாளர்களும் வடபகுதியை நோக்கி படை எடுக்கத்தொடங்கிவிட்டனர். மக்களுக்கும் சுதந்திரமாக தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் மிகவும் அக்கறை செலுத்தி வருகின்றனர். கடந்த வாரம் - வடக்கில் - வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரு வேட்பாளர்களும் நேரடியாக தமது பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.


தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் தமது நிலைப்பாட்டை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட காலத்திலேயே அறிவித்திருந்தன. ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் மீறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் கூட்டமைப்பில் உள்ள இன்னொரு கட்சியான தமிழ் காங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிப்பது என அறிவித்திருந்தது.


ஆரம்ப காலத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் எனக் கூறி ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மறைமுகமாக செயல்பட்டனர். இப்போது எட்டு அம்சக் கோரிக்கையுடன் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் அறிவித்துள்ளார். அதே வேளை சரத் பொன்சேகாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்படி எந்த ஒப்பந்தங்களும் கிடையாது என இரா.சம்பந்தன் அந்த செய்தி தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மீள்குடியேற்றம், புலிகளை விடுதலை செய்தல், அதிபாதுகாப்பு வலையங்களை அகற்றல்., மீன்பிடிதுறை உட்பட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாகவே பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.


சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தது இனப்பிரச்சினை பற்றியாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அது கூட அங்கு குறிப்பிடப்படவில்லை. காரணம் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் இரு பிரதான கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும்(ஜே.வி.பி.) ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இனப்பிரச்சினை தொடர்பாக நேர் எதிரான கருத்து முரண்பாடுகள்; இருப்பது தெரிந்ததே. 13வது அரசியலமைப்பு திருத்தத்தைக்கூட ஜே.வி..பி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. இந்த நிலையில் இவர்கள், ~~இலங்கை சிங்களவர் நாடு என்ற இனவாதக் கருத்தை அடி மனதில் கொண்டிருக்கும் சரத் பொன்சேகாவிடம் எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும். இவை அனைத்தும் தமிழ் தேசியக் கூட்மைப்புக்கு தெரியாததல்ல.


எதிர்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சரத் பொன்சேகாவை ஆதரித்து வன்னியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காகவே சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.


இனப்பிரச்சினை தொடர்பாக தேர்தல் முடிந்த பின்னரே பேசலாம் என்று ஜனாதிபதி தெரிவித்தது தமக்கு திருப்தியளிக்கவில்லை எனக் கூறிய சம்பந்தர் இப்போது எந்த நம்பிக்கையில் சரத்தை ஆதரிக்கிறார் என்பது புரியவில்லை.


வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கூட்டமைப்பு கூறுகிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு சட்டவிரோதமானது என்பதால் வடக்கையும் கிழக்கையும் தனி மாகாணங்களாக பிரிக்கவேண்டும் என நீதிமன்றத்தை அணுகியது ஜே.வி.;பி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கில் இணைப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு கூறி வடக்கு கிழக்கை தனித்தனி மாகாணங்களாக பிரித்து தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் சரத் என். சில்வா. இந்த நீதியரசர் சில்வாவும் ஜே.வி.பி.யும்தான் சரத் பொன்சேகாவின் பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்பார்களா?


அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நீக்குவது தொடர்பாக கூட்டமைப்பு தெரிவிக்கிறது. யுத்தம் முடிந்த கையுடன் நடந்த பாதுகாப்புச் சபைகூட்டத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு தொடர்பாக வைத்த ஆலோசனைகளில் ஒன்று புலிகள் மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்கு இப்போதுள்ள இராணுவத்திற்கு மேலும் ஒரு லட்சம் இராணுவத்தை புதிதாக சேர்த்து வடக்கு கிழக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது. இந்த எண்ணத்துடன் செயல்பட்ட சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு வலையம் தொடர்பாக சாதகமான முடிவை எப்படி எதிர்பாhர்க்கமுடியும்.


மீள்குடியேற்றம், புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டு மீன்பிடித் தடைகளும் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. A-9 பாதை எந்த நேரமும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக கூட்டமைப்பு யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவிக்கிறார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பான கூட்டமைப்பின் முடிவை கண்டித்து சிவாஜிலிங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இனப்பற்றுள்ள எந்த தமிழனும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான். திருகோணமலை அரச அதிபராக ஒரு இராணுவ அதிகாரியை நியமிப்பதா என எதிர்ப்பு தெரிவித்தவர் இரா.சம்பந்தன்;. வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்தவர் சம்பந்தன். ஆனால் இப்போது நாட்டின் தலைவராக ஒரு இராணுவ அதிகாரி வருவதற்கு ஆதரவு வழங்கும் சம்பந்தன் தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவிக்கிறார்.


சரத் பொன்சேகா நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பளம் அதிகரிப்பு எனத் தெரிவிக்கிறார். இது மாதத்திற்கா அல்லது வருடத்திற்கா எனக் குறிப்பிடப்படவில்லை. ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தான் பதவி ஏற்று ஆறு மாதகாலத்துக்குள் ஒழிப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அறிவிப்பை அமைச்சரவைக்கு அனுப்பப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்று நிறைவேற்றிய பின்னர் சர்வசன வாக்கெடுப்பிலும் மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். தற்போதை தேர்தல் முறையில் தனித்து இந்தப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும்; பெறமுடியாது. எனவே ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் இணைந்தே ஜனாதிபதி முறையை மாற்ற முடியும்.


இன்றைய சூழலில் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள வாக்குறுதிகள் சாத்தியமில்லாதவை என்று தெரிந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்ற அரசியல் அவதானிகளின் குற்றச்சாட்டு நியாயமானதே.

1 கருத்து: