14 ஜனவரி, 2010

அரசியல் தீர்வொன்றை முன்வைப்பார் என்ற நம்பிக்கையிலேயே மகிந்தவை நாம் ஆதரிக்கின்றோம்- புளொட்

எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் ஒப்பிடுமிடத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு சிறந்தவொரு அரசியல் தீர்வை முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர், புலிகளின் சிறுவர் போராளிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை அரசு ஆரம்பித்து செயற்படுத்தி வரும் இவ்வேளையில் இவற்றைக் குழப்பி எமது சமூகத்திற்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாகவுள்ளோம். ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகள் தமக்குள் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளையும் கருத்துக்களையும் கொண்டவை என்பது வெளிப்படையானது.
இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் பாராளுமன்றம் எப்போதும் குழப்பகரமானதாகவே இருக்கும். தனக்கென ஒரு பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிராதவரை சரத் பொன்சேகாவினால் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லமுடியாது. மகிந்த ராஜபக்ஸவினது அரசாங்கத்திலும் இனவாதகொள்கையுடையவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் மகிந்தவிடமுள்ளது. இவற்றை கருத்திலெடுத்தே நாம் வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றோம். இவ்வாறு நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக