17 அக்டோபர், 2010

போதுமான நிதி ஏற்பாடு இன்றி அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி





போதுமான நிதி ஏற்பாடு இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

அடிக்கல் நாட்டிவிட்டு வருடக்கணக்கில் நிறைவு செய்யப்படாத அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் தம்மையே குறை கூறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிறைவு செய்யப்படாதுள்ள திட்டங்களை துரிதமாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, போதைப் பொருள் கொண்டு வருபவர்கள், விற்பனையாளர்களை விட்டு விட்டு, சிறு அளவில் போதைப் பொருள் பாவிப்போரையே கைது செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதா கவும் சுட்டிக்காட்டினார்.

இது விடயத்தில் பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸாரின் அர்ப்பணிப்புள்ள சேவையை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தென் மாகாண அபிவிருத்தி செயற்திட்ட மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று வெலிகம நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மஹிந்த யாப்பா அபேவர்தன, ராஜித சேனாரத்ன, பியசேன கமகே, பிரதியமைச் சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைக் கட்டடங்கள் பலவற்றின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று பெருமளவு அரச கட்டடங்கள் பல்வேறு காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. பெரும் நிதிச் செலவில் இக்கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு, தற்போது எவருக்கும் பயனில்லாமல் கைவிடப்பட்டுள்ளன.

இவற்றை மீள பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களை நிறைவு செய்து அவற்றை உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனாமி வீடுகள் பல உரியவர்கள் பொறுப் பேற்காத நிலையில் பயனற்றுக்கிடக்கின்றன. அந்த வீடுகளை விற்பதற்கு இடமளிக்கக் கூடாது. உரியவர்கள் பொறுப்பேற்கா விட்டால், அவற்றை அரச உத்தியோகத் தர்களின் உத்தியோகபூர்வ விடுதிகளாகப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக