16 அக்டோபர், 2010

தமிழக முன்னாள் - இந்நாள் முதல்வர்களுக்கு கொலை மிரட்டல்கள்!



தமிழகத்தின் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமுள்ளன. இருவருக்கும் மாறிமாறி எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகின்றன.

முதல்வர் கருணாநிதியை, 'வான்வழி தாக்குதல்' மூலம் கொல்லப் போவதாக வந்த எஸ்.எம்.எஸ். மிரட்டல் குறித்து சைபர் கிரைம் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், முதல்வர் கருணாநிதியை கொல்லப் போவதாகவும், அவருடன் மூவர் இதற்காகவே உள்ளனர் என்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு ஈ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை போக்குவரத்து பொலிசின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள '90031 30103' எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதில், "முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் மீது வான்வழியாக குண்டுவீசி தாக்குதல் நடத்துவோம்" எனவும், இறுதியில் சேலையூர், செம்பாக்கம் கோபிநாத் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல், பொலிசாருக்குக் கிடைத்தவுடன், முதல்வரின் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, சைபர் கிரைம் பொலிசார், எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட எண் குறித்து ஆய்வு செய்ததுடன், சிம் கார்ட் முகவரி குறித்து விசாரித்தனர்.

அப்போது, அதில் அளிக்கப்பட்ட முகவரி போலியானது என்பது தெரியவந்தது.தொடர்ந்து சைபர் கிரைம் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயாவுக்கும் மிரட்டல்கள்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை மறுதினம் மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறி, ஜெயா 'டிவி' தலைமை அலுவலகத்திற்கு ஏற்கனவே 14 கடிதங்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, கிண்டி பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மதுரை, வில்லாபுரத்தில் இருந்து ஈஸ்வரன் என்பவர் பெயரிலும், தஞ்சையை சேர்ந்த சுமதி, நாகராஜன் ஆகியோர் பெயரிலும் இரண்டு கடிதங்கள் வந்துள்ளன.

இவை குறித்தும், கிண்டி பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள், ஈ-மெயில் மற்றும் மர்ம போன்கள், எஸ்.எம்.எஸ்.கள் மூலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக