7 ஆகஸ்ட், 2010

பாராளுமன்றத்துக்கு பின்கதவால் வந்தவர்களின் பேச்சுக்களை கணக்கிலெடுக்க அவசியமில்லை: திகாம்பரம்

மக்களிடம் எனது அரசியலை முன்வைத்து மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டே எனது பாராளுமன்ற பிரவேசம் அமைந்தது. அந்த மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியல் நிலைவரங்களுக்கு ஏற்ப செயற்படும் உரிமை எனக்குண்டு. மக்களின் செல்வாக்கு இழந்து தேசிய பட்டியல் மூலமாக பின்கதவால் வந்த யோகராஜனுக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையுமில்லை என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தாம் அரசுக்கு ஆதரவு தெரிவித்தமை குறித்து ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் 2004 ஆம் ஆண்டிலேயே அரசியலில் பிரவேசித்தேன். இந்த ஆறுவருட அரசியல் பயணத்தில் என்னுடைய உயிரை பணயம் வைத்தும் உடமைகளை இழந்தும் எனது அரசியலை முன்னெடுத்திருக்கின்றேன். இது தவிர யாரிடமும் எந்த சலுகையையும் பெற்றுக் கொண்டவனல்லன்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளில்; நானும் ஒருவன் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். மலையக மக்களின் மண்வாசனை அறியாத யோகராஜன் தன்னுடைய பதவிக்காக இ.தொ.காவில் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போற்றி புகழ்ந்து விட்டும் தற்போது ஆறு மாதத்துக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவியவர்.

அதிலும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க திராணியற்று சூசகமாக தேசிய பட்டியல் உறுப்பினரானவர். இவரது பதவிக்காக சச்சிதானந்தம் அவர்களும் , செல்லச்சாமி அவர்களும் பலிக்கடாவாக்கபட்டார்கள். மக்களை லீட் பண்ணி பெயரெடுத்தவரல்லர் யோகராஜன். மாறாக மக்களை வைத்து டீல் பேசி அரசியல் செய்பவர்தான் யோகராஜன். கொழும்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கூட தாண்டாத நிலையில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்தான் யோகராஜன்.

போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமெனில் கொழும்பு மாநகர சபைக்கு கூட அவர் தெரிவாக மாட்டார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வக்காளத்து வாங்குவதற்காக ஐ.தே.க வுக்கு துதி பாடுகின்றார்.

நான் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமில்லை சுதந்திரகட்சி உறுப்பினருமில்லை. நான் சுயாதீனமாக இயங்கும் தனிக்கட்சி ஊடாக அரசியலை முன்னெடுப்பவன். எனது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறேனே தவிர ஐக்கிய தேசிய கட்சியின் தயவில் நான் தெரிவாகவில்லை.

எனவே எமது தீர்மானத்தை நாம் எடுத்து செயற்படுவோம். மக்களின் வாக்குகள் எமக்கு உண்டு. மக்களிடம் செல்வாக்கும் எமக்கு உண்டு. எனவே மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பும் கடமையும் எனக்கு உண்டு. மக்கள், வாக்கு, செல்வாக்கு, பொறுப்பு கடமை என எதுவுமற்ற யோகராஜன் போன்றவர்களின் வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் எனது அரசியல் நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக