7 ஆகஸ்ட், 2010

வீரகேசரியின் 80ஆவது ஆண்டுவிழா தலைமையத்தில் நடைபெற்றது



எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் வெளிவரும் வீரகேசரி தனது 80 ஆவது ஆண்டுவிழாவை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதன் ஆரம்ப நிகழ்வு கிரான்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி தலைமையகத்தில் இன்றுகாலை நடைபெற்றது.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் காலை 10.05 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பணிப்பாளர் குமார் நடேசன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார்.

"1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து மக்கள் மத்தியில் இன்று பிரசித்திபெற்று திகழ்கிறது. இந்த வெற்றிவிழாவைப் போல நூற்றாண்டு விழாவினையும் நாம் கொண்டாட வேண்டும். நடைமுறை உலகில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அடுத்துவரும் 20 ஆண்டுகளில் நாம் அடையப்போகும் இலக்குகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வீரகேசரி நாளேடுகளின் பிரதம ஆசிரியர் இரத்னசபாபதி பிரபாகன், வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம பொறுப்பாசியர் வடிவேல் தேவராஜ், ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன. எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கீழ் வெளிவரும் 'ஹோம் பில்டர்ஸ்" சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத வெளியீடு முகாமைத்துவப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டு மீள்வெளியீடு செய்துவைக்கப்பட்டது. இறுதியாக பொதுமுகாமையாளர் எம்.கந்தசாமி நன்றியுரை நிகழ்த்தினார்.

இதேவேளை, வீரகேசரியின் சென்னை, மதுரை அலுவலகங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள கிளைக்காரியாலயங்களிலும் விசேட கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக