29 ஆகஸ்ட், 2010

கடந்த கால யுத்தப் பாதிப்புகளுக்கு இருசாராருமே பொறுப்பு:மில்ரோய் பெர்னாண்டோ

கடந்தகால யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இருசாராரும் பொறுப்பாகும் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார். பெரிய புல்லுமலைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லைக் கிராமங்களான பெரிய புல்லுமலை, சிப்பிமடு, கோப்பாவெளி, சமகிபுர, பதியத்தலாவ போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ளனர். நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்குச் சென்று இருந்தால் அங்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே எங்களுடைய நோக்கமாகும்.

உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் வகையில் அதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நாங்கள் கொழும்பு சென்றவுடன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதுடன் மீள்குடியேற்றம் தொடர்பான குழுவினரையும் சந்தித்து வெகுவிரைவில் தீர்வுகளைத் தருவோம் என உறுதியளிக்கிறோம்.

மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், உரையாற்றுகையில்: புல்லுமலைப்பிரதேசம் மிகவும் முக்கியமான பிரதேசமாகும். ஏனென்றால் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சந்தோசமாக வாழ்ந்த பிரதேசம் என்பதுடன் மிகவும் வளமான பிரதேசமும் ஆகும். யுத்தம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டது. ஆரம்பத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் குடியமர வரும்படி சொன்னபோது யாரும் வரவில்லை. வீடுகளும் அமைக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பொழுது அனைவரும் வர விரும்புகின்றமை மகிழ்ச்சியான விடயம்.

இப்போது அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் வடக்குக்குத் திருப்பப்பட்டுள்ளமையால் மிகக்குறைந்த அளளவிலேயே இங்கு வேலைகளைச் செய்ய முடிகிறது. வீட்டுத் திட்டங்களுக்காகவும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்காகவும் நாங்கள் பல்வேறு தரப்பினருடனும் கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக