9 ஆகஸ்ட், 2010

மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையின் திருத்தம் குறித்து செயற்குழுவில் ஆராயப்படும்- கயந்தகருணாதிலக்க

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையில் சேர்க்கப்படவுள்ள திருத்தங்கள் குறித்து எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படும் என்று கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக் குழுவின் யோசனைகள் அடங்கிய அறிக்கைக்கு கடந்த செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்தது. எனினும் அதில் சில திருத்தங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக பல்வேறு விடயங்களில் பெண்களின் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் வாக்கெடுப்பு என்று வரும்போது உள்ளூராட்சிமன்ற பிரதிநிதித்துவங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனவே இதுகுறித்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் புதன்கிழமை இடம்பெறும் செயற்குழுக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படுவதுடன் அவற்றை அங்கீகரிப்பது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும்.

மேலும் இந்த திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டால் அடுத்த சம்மேளனக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான திகதி தீர்மானிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக