இன்று ஆரம்பமாகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வன்னிப்பிரதேச மாவட்டங்களில் இருந்து 2500 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளதாக மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்.
இதேவேளை மருதமடு ஓமந்தை பூந்தோட்டம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் உள்ள சரணடைந்தவர்களில் இருந்து 367 பேர் இந்தப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். போர்ப்பயமற்ற அமைதியான சூழலில் முதற் தடவையாக இந்த முறை வன்னிப்பிரதேச மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவத்றகுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு மையங்களில் உள்ள சில பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் வந்து சேர்வதில் ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்களும் எந்தவிதமான கஷ்டமுமின்றி இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் புனர்வாழ்வு மையங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் 367 பேருக்கும் ஆசி வழங்கும் வகையில் அவர்களைப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்கான கல்வியூட்டலில் பங்கெடுத்த ஆசிரியர்கள் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை மேலதிக மாகாணக் கல்விப் பணிமனை வடமாகாண கல்வித் திணைக்களம் வடமாகாணக் கல்வி அமைச்சு சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஆகியோரின் சார்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வித்தியா விநாயகர் ஆலயத்தில் பொங்கலுடன் கூடிய விசேட பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் நூல் கட்டப்பட்டது.
இந்தப் பரீட்சார்த்திகளுக்கான கல்வியூட்டலுக்கு நேர்டோ மற்றும் வொவ்கொட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளையும் அனுசரணையையும் வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த 367 பரீட்சார்த்திகளுக்கும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக