யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன்போது, கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்படுமென வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாண அரச அதிபர் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான முதலாவது கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
வளங்களைப் பயன்படுத்தி சிறந்த தரம்மிக்க பொருட்களை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்வதே இக்கைத்தொழில் பேட்டையை நிறுவுவதன் பிரதான நோக்கமெனவும் ஆளுநர் கூறினார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தீவுப் பகுதிகளில் ஹோட்டல்களை அமைப்பதில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதனால், சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோருக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர் மிக விரைவில் தீவுப் பகுதிகள் சுற்றுலா மையங்களாக மாற்றியமைக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக