24 ஜூலை, 2010

ருஹணுணு மாணவன் மரணம் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: பதற்றத்தை தணிக்க இராணுவம், பொலிஸ்

ருஹணுணு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பதுளை ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது. ஆனால் பொலிஸ் தாக்குதலில் இவர் இறந்ததாக குற்றஞ்சாட்டியுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது. இதனைக் கண்டித்து மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாத்தறை பொலிஸ் நிலையம் வரையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர் குழுவினர் மாத்தறை நகர வீதியில் அமர்ந்த நிலையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதேவேளை, மாத்தறை பொலிஸ் நிலையத்தைச் சுற்றி இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் வீதித் தடைகளையும் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் உட்புகாத வகையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

ருஹணுணு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே கடந்த ஜூன் 18ஆம் திகதி இடம்பெற்ற மோதலிலே இந்த மாணவன் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். இவர் காய்ச்சலில் பீடிக்கப்பட்டிருந்ததாக அவரின் தாயார் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாத்தறைக்கும் பதுளைக்கும் இரு சி.ஐ.டி. குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இது தவிர மாத்தறை பொலிஸார் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக