1 ஜூன், 2010

வால்மீகி திருடன் இல்லை: பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு





சண்டிகர் :"ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி உண்மையில் திருடன் இல்லை' என்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் சேனல், தயாரித்து ஒளிபரப்பி வரும் தொடரில், வால்மீகி பற்றி இரு கதாபாத்திரங்கள் பேசுவதாக வரும் காட்சி, மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாக கூறி, வால்மீகி ஜாதியை சேர்ந்த நாவிகாஸ் என்பவர், 2009ல் எப்.ஐ.ஆர்., பதிவு செய்திருந்தார்.தனது எப்.ஐ.ஆர்.,ல் "அந்த சேனல் ஒளிபரப்பி வரும் "பிடாய்' என்ற தொடரில், இரு கதாபாத்திரங்கள் உரையாடுகின்றனர். ஒருவர் மற்றவரை பார்த்து, வால்மீகி, திருடனாக இருந்து பின் மகரிஷியானார் என்பது உண்மையா என்று கேட்க, மற்றவர் அது சரிதான் என்கிறார். கேள்வி கேட்டவர், இப்படி ஒருவன் திருடனாக இருந்து, பின் மகரிஷியாக முடியுமா என்று கேட்கிறார். மற்றவர், ஆம் அப்படி ஆக முடியும் என்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.அந்த எப்.ஐ.ஆர்.,யை தள்ளுபடி செய்யும்படி, சேனல் நிறுவனம், பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சேனல் தனது மனுவில், கதாபாத்திரங்களின் இரண்டாவது பேச்சு, அதாவது திருடனாக இருந்த ஒருவன் மகரிஷியாக முடியுமென்ற பேச்சை, வால்மீகி மீதான புகழுரையாக சுட்டிக் காட்டியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி ராஜிவ் பல்லா, சேனலின் மனுவை நிராகரித்து, தனது தீர்ப்பில் கூறியதாவது:மகரிஷி வால்மீகியின் கதையை பொறுத்தவரை, புராண கதைகளுக்குள், அவரது உண்மையான வரலாறு புதைந்து போய்விட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை, கி.மு., ஒன்பதாம் நூற்றாண்டு வரை தோன்றிய, வேத இலக்கியங்களின் அடிப்படையில், பாட்டியாலாவிலுள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் "மகரிஷி வால்மீகி இருக்கை' ஆராய்ந்து, அவர் திருடனாக இருந்திருக்க முடியாது என்றே முடிவுக்கு வந்துள்ளது.எலக்ட்ரானிக் ஊடகங்கள், மத சம்பந்தப்பட்ட கருத்துக்களை பரப்ப முற்படும் போது கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்வோடும், கவனத்தோடும் ஒளிபரப்ப வேண்டும். அக்கருத்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் என்ற உணர்வும் வேண்டும். இவ்வாறு நீதிபதி ராஜிவ் பல்லா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக