1 ஜூன், 2010

கப்பலை தாக்கி 16 பேர் கொலை: இஸ்ரேல்- துருக்கி போர் மூளுமா?; ஐ.நா.சபை அவசரமாக கூடுகிறது

.



பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா பகுதி ஹமாஸ் இயக்கத்தினர் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகள் வருவதை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் துருக்கி நாட்டில் இருந்து 6 கப்பல்களில் 10 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு காசாவுக்கு வந்தனர். கப்பல்களில் ஏராளமான பாலஸ்தீன ஆதரவாளர்களும் இருந்தனர்.

இந்த கப்பல்கள் காசாவுக்கு செல்லக்கூடாது என்று இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்தது. இதையும் மீறி 6 கப்பல்களும் சென்றன. நடுக்கடலில் கப்பல்கள் வந்தபோது இஸ்ரேல் கடற்படையினர் அவற்றை வழிமறித்து 5 கப்பல்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஒரு கப்பலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயன்றபோது இஸ்ரேல் ராணுவத்தினர் திடீரென அங்கு இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 16 பேர் உயிர் இழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிவாரண கப்பலை தாக்கி 16 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதால் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி கப்பல் தாக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும் லட்சக்கணக்கானோர் தலைநகரம் இஸ்தான்புல்லில் கூடி இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

துருக்கி இஸ்ரேலுக்கான தனது நாட்டு தூதரை உடனடியாக விலக்கி கொண்டுள்ளது.

துருக்கி பிரதமர் நெசப் எல்டோகான் கூறும்போது இஸ்ரேலில் கொடூர செயல்களை பார்த்து கொண்டு நாங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்கமாட்டோம் என்றார்.

துருக்கி வெளிவிவகார மந்திரி அகமது தேவுதோக்ளு கூறும்போது இஸ்ரேல் நடவடிக்கை காட்டுமிரண்டிதனமானது. இதற்காக இஸ்ரேல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் கடும் பின் விளைவுகளை இஸ்ரேல் சந்திக்க வேண்டியது வரும் என்று கூறியுள்ளார்.

துருக்கியின் மிரட்டல் இஸ்ரேல்- துருக்கி இடையே போர் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அரபு லீக் நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக குதித்து உள்ளன. இந்த நாடுகளின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. அதில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பலமுறை போர்கள் நடந்துள்ளன. இப்போது அவசரமாக அரபு லீக் நாடுகள் கூடுவதும் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

இஸ்ரேல் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் குறித்து முழு விசாரணைக்கு ஐ.நா.சபை உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா வருத்தம் தெரிவித்து உள்ளது. இது பற்றி ஐ.நா.சபைக்கான அமெரிக்க துணை தூதர் அலேஜிண்டோ கூறும்போது அங்கு என்ன நடந்தது? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அங்கு சமீப காலமாக நடக்கும் வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் பிரச்சினைகள் உருவாக்குகின்றன என்றார்.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பிலிப் குரோலி கூறும்போது இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை கொடுக்கிறது. இதுபற்றி இஸ்ரேல் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்கி மூனும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் இஸ்ரேல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக