17 ஜூன், 2010

சகல கட்சிகளும் வன்னி மக்களின் வாழ்வை மேம்படுத்த முன்வர வேண்டும் : ஜேவிபி

அனைத்தையும் இழந்து நிற்கும் வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சகல மக்களும் சமத்துவத்தோடும் சம உரிமையோடும் வாழும் சூழ்நிலை உருவானால் மட்டுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜே.வி.பியினர் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினர்.

மாநாட்டில் உரையாற்றிய சோமவன்ச அமரசிங்க அங்கு மேலும் தெரிவித்ததாவது :

"யுத்தம் முடிவடைந்து 13 மாதங்கள் கடந்த நிலையிலும் மகிந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எந்தவித அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. யாழ்ப்பாணத்திற்கு முன்னர் மூன்று தடவைகள் நாம் சென்றிருந்தோம். யுத்தம் முடிவடைந்த நிலையில் முதன் முதலாக வடபகுதிக்கு இந்த வாரம் விஜயம் செய்தோம்.

வன்னியில் மீள்குடியேறிய தமிழ் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டோம். உண்மையிலேயே அவர்களுடைய நிலைமை பரிதாபகரமாகவே உள்ளது.

மகிந்த அரசாங்கம் அங்கு மீள்குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட இன்னமும் பூர்த்தி செய்யவில்லை. அத்துடன் அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தக்கூடிய திட்டங்களேனும் அரசாங்கத்திடம் இதுவரை இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார ரீதியாக வளப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதைவிட்டு, அரசாங்கம் பாதுகாப்புக்கென வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஆறுமாத காலத்துக்குள் தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இருப்பினும் 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே உண்மை.

வடபகுதியில் காணாமற் போனவர்களின் விவரங்களைக் கூட அறிக்கையாக வெளியிடமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் செல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகளை விசாரணைக்குட்படுத்தி, நீதிமன்றில் ஆஜர்செய்து, குற்றமற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எமது கட்சி அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

மக்களிடையே நல்லிணக்கம் வேண்டும்

மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அரசாங்கம் பேச்சளவில் சொல்லிக்கொண்டிருக்கிறதே தவிர, செயலளவில் அதற்கு முரணாகவே நடந்து வருகிறது.

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

நாட்டில் சகல மக்களும் சமத்துவத்தோடும் சம உரிமையோடும் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும். பிரச்சினைக்கான தீர்வு உரிய காலத்தில் எட்டப்படாவிட்டால் வெளிநாடுகளின் தலையீடு மேலும் அதிகரிக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், அனுரகுமார திஸநாயக்க, விமல் ரத்னநாயக்கா, முத்துபண்டார ஐயக்கோன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக