17 ஜூன், 2010

இடம்பெயர்ந்த 585 பேர் இன்று ஒட்டு சுட்டானில் மீள்குடியேற்றம்

3500 பேர் கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களில் அடுத்த வாரம் மீள்குடியேற்றப்படுவர்



முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் இன்று (17) 178 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் மீள்குடியேற்றப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது.

மாங்குளம் ஏ-9 வீதிக்கு மேற்கே இன்றுபுரம் மற்றும் திருமுருகண்டி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் மீள்குடியேற்றப்படுவதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ்.

ஸ்ரீரங்கன் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டவாளி பிரதேச செயலகப் பிரிவில் 35 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேவேளை அடுத்தவாரம் சுமார் 3500 பேர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் மீள்குடியேற்றப்பட உள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பனிச்சன்குளம் மற்றும் அம்பகாமம் கிராமசேவகர் பிரிவுகளில் எதிர் வரும் 21ஆம் திகதி 175 குடும் பங்களைச் சேர்ந்த 550 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல் லைத்தீவு திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார்.

இது தவிர எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 16 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றப் பணிகள் இடம் பெற உள்ளதாக கிளிநொச்சி அரச அதிபர் கேதீஸ்வரன் ரூபாவதி கூறினார்.

உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் இங்கு மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

இது தவிர கரச்சி கிழக்கு, வட்டக்கச்சி, மாவடியம்மன், ராம நாதபுரம் உட்பட 6 கிராம சேவகர் பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி சுமார் 1500 பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் அரச அதிபர் கூறினார். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாம்களில் இருந்து விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக