இந்த வருடத்தில் இலங்கை மின்சார சபைக்கு 32 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரிய நஷ்டங்களை தடுப்பதற்கு ஜூன் முதலாம் திகதி முதல் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்.
கெரவலப்பிட்டிய மின் நிலைய பணிகளை நேற்று (6) பார்வையிட்ட பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-
கடந்த 10 வருடத்தில் மின்சார சபைக்கு 148 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது. எதிர்வரும் 10 வருடத்தில் 391 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுமென கணிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையும் மின்சார சபையின் நஷ்டத்தில் 1600 ரூபாவை தாங்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. மோசடி, செயற்திறனின்மை காரணமாக மட்டுமன்றி, இந்த நஷ்டங்களுக்கு காரணமான பல பிரிவுகளை நாம் அடையாளங் கண்டுள்ளோம். எரிபொருள் மூலமே மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்வதால் அதிக செலவு ஏற்படுகிறது.
வீதி மின்விளக்குகளுக்காக மின்சார சபை கட்டணம் அறிவிடுவது கிடையாது. இதனால் மின்சாரம் வீண் விரயம் செய்யப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கான உள்ளூராட்சி சபைகளுக்கு ஜூன் முதலாம் திகதி முதல் விசேட வழிகாட்டல்கள் வழங்கப்படும். ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் சீராக்கல் கட்டணச் சலுகை மே முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மட்டுப்படுத்துவதற்கான 6 மாத கால குறுகிய காலத் திட்டம் ஜூன் மாதம் முதல் அமுல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான ஐந்து வருட திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும். இதனூடாக எதிர்காலத்தில் மின்சார சபைக்கு ஏற்பட உள்ள பாரிய நஷ்டத்தைக் குறைக்க உள்ளோம்.
இது தவிர பல நிறுவனங்களுக்கு மின்சாரசபை 161 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டும். அத்தோடு 300 பில்லியன் ரூபா முதலீடும் செய்யப்பட்டுள் ளது. மின்சார சபைக்கு அரச நிறுவனங்களில் இருந்து பெறுமளவு பணம் கிடைக்க வேண்டியுள்ளது. குறித்த நிறுவனங்களுடன் பேசி அவற்றை மீளப் பெறத் திட்டமிட் டுள்ளோம். ஆஸ்பத்திரிகள், பாதுகாப்புப்ப டையினருக்கு வழங்கும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக