ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானங்களை மாற்றுவதற்குக் கட்சியில் சிலர் சதித் திட்டம் தீட்டுவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கட்சியின் செயற் குழுக்கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படவேண்டுமெனத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தலைமைப் பதவியைத் தவிர ஏனைய பதவிகள் அனைத்திற்கும் தேர்தல் நடத்து வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சிலர் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘ஐக்கிய தேசிய கட்சி என்பது ரணசிங்க பிரேமதாசவின் குடும்பத்திற்குச் சொந்தமானதோ அல்லது வேறு தனி நபர்களுக்குச் சொந்தமானதோ அல்ல’ என்று தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, நாட்டில் அனைத்துத் தராதரங்களைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன. தலைமைத்துவத்தை மாற்ற வேண்டுமென சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிலர் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு செய்துள்ளனர். இதில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் விதிவிலக்காக இல்லை.
இவ்வாறு, தேர்தல் தோல்வி, தேசியப் பட்டியல் ஆசனப் பகிர்வில் அதிருப்தி எனச் சிக்கித் தவிக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மாற்றிவிட்டு, சஜித் பிரேமதாச போன்ற ஒருவரைத் தலைவராக்க வேண்டுமெனச் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், சஜித் பிரேமதாசவுக்குத் தலைவர் பதவியின்றி உதவித் தலைவர் பதவி வழங்க வேண்டுமென ஒரு பிரிவினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் வாக்கெடுப்பின் மூலமே எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாச திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக