7 மே, 2010

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற கூடியதாக அமைய வேண்டும் - சம்பந்தன்



அரசாங்கம் நியமிக்க உத்தேசித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மக்கள் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றக்கூடியதொன்றாக அமைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த கால நடவடிக்கைகளில் உண் மைத் தன்மை குறித்த மூலகாரணங்களை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அர்த்த புஷ்டியான நல்லிணக்கம் ஏற்பட முடியாதெனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று, முன்னாள் அமைச்சர் அமரர் ரிச்சட் பத்திரனவின் அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு அமைப்பது தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன.

கடந்த கால நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவ்வாறான தவறுகள் இனியும் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பில் ஆராயவுமே இந்த நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. தமக்கான கெளரவம் மீள நிலைநாட்டப்பட வேண்டும். ஆட்சியதிகாரம் நல்லிணக்கம் போன்றவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் பிராந்திய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் சட்டம், ஒழுங்கு, காணி, கல்வி உள்ளிட்ட அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவராக ரிச்சட் பத்திரன திகழ்ந்தார் எனவும் சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக