5 மே, 2010

கிராம மட்ட அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டுமொரு புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது


அவசரகால சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர், யுவதிகளே - நாமல்



நாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள் தான் வாழ்ந்தார்கள்.

இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக திசேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித் திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக