5 மே, 2010

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்




அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படவுள்ளன என்ற செய்தி வெளியாகிய அதே காலத்தில் அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்ற செய்தியும் வெளியாகியது. இச்செய்தி தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை உத்தியோகபூர் வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாகவும் சில திருத்தங்கள் இடம் பெறலாம் என்ற பலமான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வொன்று நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் கூறியதன் பின்னணியில் இந்த எதிர்பார்ப்பு நிலவுவது இயல்பானதே.

எவ்வாறாயினும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு எடுக்கும் முடிவிலேயே அதன் எதிர்காலமும் தமிழ் மக்களின் எதிர்காலமும் தங்கியுள்ளன. இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதால் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் தமிழ் மக்களே.

எனவே அவர்கள் ஏதாவதொரு தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். தாங்கள் நம்பிக்கை வைக்கும் தலைவர்கள் தீர்வைப் பெற்றுத்தரத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழப்பதைத் தவிர்க்க முடியாது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு பிரதான காரணம்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்க முடியாது என்பதும் முழுமையான அதிகாரப் பகிர்வே தேவை என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடுகள். அரசாங்கத்தின் உத்தேச அரசி யலமைப்புத் திருத்தத்துக்கும் தங்கள் நிலைப் பாட்டுக்குமிடையே முரண்பாடு காணும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எடுக் கப்போகும் முடிவு தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த காலங்களில் பதவியிலுள்ள அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த முன்வந்த தீர்வுகளை அதிகாரங்கள் போதாது எனக் கூறித் தமிழ்த் தலைமை நிராகரித்து வந் திருக்கின்றது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் உதாரணமாகக் கூறலாம். இந்த நிராகரிப்பு தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவையே தந்திருக்கின்றது.

அதாவது எவற் றையெல்லாம் நிராகரித்தார்களோ அவற்றிலும் பார்க்கக் குறைவான தீர்வே நடைமுறைச் சாத்தியமானது என்ற நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. இன்னொரு விதமாகக் கூறுவதானால், தலைவர்களின் தவறு மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

கடந்த காலத் தவறுகளைப் படிப்பினையாகக் கொண்டு தமிழ்த் தலைவர்கள் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். பல தடவைகள் தினகரன் சுட்டிக்காட்டியது போல, எந்தத் தீர்வு சாத்தியமானதோ அதைப் பெற் றுக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதுதான் ஆக்கபூர்வமான அணுகுமுறை. தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளாமலிருப்பதற்கும் முழுமையான அரசியல் தீர்வுக்கான நடைமுறையை முன்னெடுப்பதற்கும் இந்த அணுகுமுறையே பொருத்த மானது.

அரசியலமைப்புத் திருத்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அரசியல் தீர்வு நடைமுறையை முன்னெடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக