மருந்து கொடுத்து உண்மையை வெளிக்கொணரும் வழிமுறை இந்தியாவில் கையாளப்பட்டுவருகிறது
இந்தியாவில் பொலிஸாரும் பிற விசாரணையாளர்களும் குற்ற சந்தேக நபர்களை விசாரிக்கும்போது "உண்மை வெளிக்கொணரும் மருந்துகள்" என்று கூறப்படும் மருந்துகளை அவர்களின் உடலில் பலவந்தமாக ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இப்படியான இரசாயனங்களைப் பயன்படுத்துதல், மூளை செயற்பாட்டை கண்காணித்தல், உண்மை கண்டறியும் கருவியைப் பயன்படுத்துதல் போன்றவை தனி மனித சுதந்திரங்களை மீறுவதால் இவை சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
விசாரணை அமைப்புக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அந்த சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்தும்போது, அவர்கள் உண்மையான தகவல்களைச் சொல்லாத நிலையில், மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சர்ச்சைக்குரிய வழிமுறைகள்
* உடலில் மருந்தைச் செலுத்தி ஒருவரை தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணரும் முறை நார்கோ அனாலிஸிஸ் ஆகும்.
* விசாரிக்கப்படுபவரின் மூளைச் செயல்பாடுகளை அவதானித்து அவர் கூறும் விஷயங்களின் உண்மைத் தன்மையை நிர்ணயிப்பது பிரைன் மேப்பிங் ஆகும்.
* உடற்கூறு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் பேசுவது உண்மையா என்று கண்டறியும் முறை பாலிகிராஃப் ஆகும்.
நீதிமன்றம் தீர்ப்பு
இது போன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு எந்த ஒரு தனிநபரையும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறத்துவது தனிநபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவரையோ, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படுவோரையோ அல்லது சாட்சியம் அளிப்பவரையோ அதுபோன்ற சோதனைகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதை, அரசியல் சட்டப் பிரிவு 20 உட்பிரிவு மூன்றை மீறுவதாகும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு நபரின் சம்மதத்துடன் அந்த சோதனைகள் நடத்தப்பட்டாலும், அந்தத் தகவல்களை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.
உடற்கூறு அடி்படையில் உண்மை கண்டறியும் பாலிகிராஃப் சோதனையில் ஒரு நபரை ஈடுபடுத்தும்போது, தேசிய மனித உரிமை கமிஷன் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக