அவசரகால சட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் உரை
சரணடைந்த அடையாளம் காணப்பட்ட 1300 பயங்கரவாதிகளில் 300 பேர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் தலைதூக்கி வரும் பயங்கரவாத வலையமைப்பு முறியடிக்கப்படுதல் இன்றைய முக்கிய தேவையாக இருக்கிறது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் நேற்று கூடியது. பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் பலமடைந்து வருவது தெரிகிறது. நிதி சேகரிப்பு போன்றன அதிகரித்து வருவதையும் உணரக்கூடியதாக உள்ளது.
புலிகள் இன்று மூன்று பிரிவுகளாக சர்வதேச மட்டத்தில் இயங்குகிறார்கள். ருத்ரகுமாரன் தலைமையில் சுவிஸில் அமைப்புகளை உருவாக்கவும், இலங்கையில் சில அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கியும் பிரான்ஸிலும் சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு செயற்படுவது இலங்கையில் ஈழம் ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர். இந்த புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதே எமது அடுத்தகட்டமாக இருக்கிறது.
அரசாங்கத்திடம் சரணடைந்த சுமார் 10,350 புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 2400 பேரளவில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு யுகத்தையே அனைவரும் விரும்புகின்றோம். எனினும் அடிப்படை உரிமைகளை மதிக்கக்கூடிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத திருத்தங்களூடான அவசரகாலச் சட்டத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக