22 மே, 2010

பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்

பள்ளிக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் 60 ஆயிரம் தமிழ் மாணவ,​​ மாணவிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,​​ இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான டி.எம்.​ சுவாமிநாதன் நிருபர்களிடம் கொழும்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று ஓராண்டு கடந்துவிட்டது.​ ஆனால் வன்னி உள்ளிட்ட வடக்கு இலங்கைப் பகுதியில் பள்ளிகள் சரிவர நடைபெறுவதில்லை.

இந்தப் பகுதிகள் போருக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.​ இந்த நிலையில் போரில் வெற்றி பெற்றதையடுத்து இப்பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துவிட்டது.

வடக்கு இலங்கைப் பகுதியில் மொத்தம் 300 பள்ளிகள் உள்ளன.​ இவற்றில் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.​ இங்கு 86 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.​ ஆனால் தற்போது வெறும் 26 ஆயிரம் சிறுவர்கள் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது.

எஞ்சியுள்ள 60 ஆயிரம் சிறுவர்கள்,​​ பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.​ காரணம் அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படவில்லை.​ இலங்கை அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து பள்ளிகளைத் திறக்கவேண்டும்.

சமுதாயத்துக்கு அடிப்படைத் தேவையான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.​ பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ,​​ மாணவியர்களுக்கு உதவவேண்டும்.

மேலும் போரின்போது வன்னிப்பகுதியில் 60,900 வீடுகள் நாசமாக்கப்பட்டன.​ இதனால் அப்பகுதி மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.​ வீடிழந்துள்ள தமிழர்களுக்கு,​​ தமிழ் வம்சாவளியினர் வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.​ இந்த வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்யவேண்டும்.

போரின்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1,590 கோடியை இலங்கைக்கு வழங்கியது.​ ஆனால் இதில் வெறும் ரூ.38 கோடி நிதியை மட்டுமே இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதன்மூலம் வடக்குப் பகுதியில் மறுசீரமைப்புப் பணிகளை செய்வதில் இலங்கை அரசு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியது.​ இதன்மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் 8 சிமென்ட் மூட்டைகள் கிடைக்கும்.​ ஆனால் இது போதுமானதாக இல்லை.​ மற்ற நாடுகள் தரும் உதவியுடன் இலங்கை அரசும் இணைந்து மறுசீரமைப்புப் பணிகளைச் செய்யவேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக