செல் என்பது, ஒரு உயிர் அணு. இது உட்கரு, மரபணுவை நிர்ணயிக்கும் டி.என்.ஏ., சைட்டோபிளாசம், செல் சுவர் உட்பட பல பாகங்கள் உள்ளன. "குளோனிங்' முறையில், ஒரு உயிரினத்தின் செல்லிலிருந்து, மரபணுவை எடுத்து, மற்றொரு செல்லில் புதைத்து பலபடியாக்கி, அதே உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இப்போது, அதையும் மீறி, ஒரு புதிய செல்லையே உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதை "சிந்தடிக் செல்' என்றழைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதற்கான முயற்சியை, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் துவக்கினர்.
ஒரு செல்லின் மொத்த மரபணுவையும், வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து, ஒரு செல் உயிரினமான பாக்டீரியாவின் செல்லில், செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., மூலக்கூறுகளை செலுத்தி, அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். அதில் ஒரு மரபணு ஜோடி பொருத்தத்தில் தவறு நேர்ந்ததை, கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டறிந்தனர். பின், அதை சரி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, அதை மீண்டும், வேறு ஒரு செல்லில் பயன்படுத்தினர். அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், அந்த செல்லின் முற்றிலும் மாறுபட்டிருந்த மரபணுவை, மீண்டும், வேறு ஒரு உயிரினத்தின் செல்லில் செலுத்தினர். அப்போது தான் ஆச்சரியம் நிகழ்ந்தது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ., புதிய மரபணுவுடன், தாய் செல் போலவே, வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால், ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. "செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல், மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் "சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.
பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும், இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது, குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் "உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர், " மருத்துவ, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக