22 மே, 2010

கர்நாடக மாநில மங்களூருவில் விமானம் வெடித்து 163 பேர் பலி(இணைப்பு02)

இந்திய கர்நாடக மாநில மங்களூருவில் அதிகாலையில் தரையிறங்க முயன்ற விமானம், மலையில் மோதி வெடித்துச் சிதறியதில் 163பேர் பலியாகினர். துபாயிலிருந்து திரும்பிய விமானம் தரையிறங்கிய வேளை, மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக விபத்துக்குள்ளானதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் 19 பேர் குழந்தைகளாவர். மீட்புப் படையினரும் தீயணைக்கும் படையினரும் விமான நிலையத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈட்பட்டு வருகின்றனர். இதுவரை 35 பேரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 6 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் பெரும் புகை மூட்டம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களில் அநேகர் கர்நாடக, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு இந்திய மத்திய, மாநில அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்ததுடன் விபத்து பற்றிய விபரங்களையும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். விமான விபத்து குறித்து விசாரணைகளைத் துரிதப்படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து இது என வர்ணிக்கப்படுகின்றது. விபத்தையடுத்து மங்களூரு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக