மீனவர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசியதாவது:
மீனவர்கள் மீன்பிடிக்கும் சில சமயங்களில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து விடுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
இந்த பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இந்தியா செல்வேன் என்றார் அவர்.
ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இந்தியா செல்லும் தேதியை ரஜிதா சேனரத்னா குறிப்பிடப்படவில்லை என்று டெய்லி மிர்ரர் பத்திரிகையில் வெளியான செய்தி கூறுகிறது.
ரஜிதா சேனரத்னா மேலும் கூறியதாவது: மேலும் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குச் செல்லும்போது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமலிருக்க அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க புதிய திட்டம் ஒன்றை இலங்கை அரசு வகுத்துள்ளது. இதற்காக ஒரு கண்காணிப்பு முறை கொண்டு வரப்படும்.
ஜப்பான் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் மீனவர்களின் படகுகள் சர்வதேச எல்லையைத் தாண்டும்போது அவர்களது படகில் வைக்கப்பட்டுள்ள கருவியிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதன்மூலம் மீனவர்கள் எச்சரிக்கையடைந்து சர்வதேச எல்லையைத் தாண்ட மாட்டார்கள். இதேபோல மற்ற நாட்டு மீனவர்கள் சர்வதேச எல்லைப் பகுதியில் வரும்போதும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்.
அப்படியும் அவர்கள் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வந்தால் அவர்கள் தெரிந்தே எல்லையைத் தாண்டி வருகிறார்கள் என்று அர்த்தமாகும்.
இலங்கை மீனவர்களைக் கைது செய்யும்போது இந்திய அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் எல்லை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.
மற்றொரு நாட்டு கடல் எல்லைக்குள் மீனவர்கள் நுழையும்போது அவர்களைக் கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ எந்தச் சட்டமும் இல்லை. அவர்களை உத்தரவாதத்தின்பேரில் உடனடியாக விடுவிக்கவேண்டும்.
2009-ம் ஆண்டில் 996 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களில் இன்னும் 87 பேரை இந்திய அரசு விடுவிக்கவில்லை. தற்போது அவர்களில் 31 பேரை விடுவிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான விமான டிக்கெட்டையும் அனுப்பியுள்ளோம்.
இலங்கை மீனவர்களை தமிழக அரசு அதிகாரிகள் கைது செய்யும்போது அவர்களை ஒருமாதத்துக்குள் விடுவித்துவிடுகிறோம். தமிழக மீன்வளத்துறை அமைச்சர், தமிழகத்திலுள்ள இலங்கை துணைத் தூதர் ஆகியோரின் உதவியோடு இதைச் செய்கிறோம்.
ஆனால் இலங்கை மீனவர்கள், ஒரிசா, கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்படும்போது அவர்களை விடுவிக்க 8 மாதங்களாகி விடுகிறது.
அந்தமான்-நிகோபார் தீவுகளில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. இந்தத் தீவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் அவர்களை விடுவிப்பதில் ஏராளமான சிரமங்கள் உள்ளன என்றார் அவர். இவ்வாறு டெய்லி மிர்ரர் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக