21 பிப்ரவரி, 2010

ஆதாரம் இல்லாமல் பொன்சேகா கைது : ராஜபக்ஷே அரசு மீது ரணில் பாய்ச்சல்




கொழும்பு :"எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது, கடும் கண்டனத்துக்குரிய செயல்' என இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாமல், சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரிய செயல். தேர்தலில் தோற்ற வேட்பாளரை கைது செய்து, சிறையில் அடைப்பது என்பது எந்த நாட்டிலும் நடக்காத விஷயம். ராணுவ சட்டப்படி ஒருவரை கைது செய்தால், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சரத் பொன்சேகா விஷயத்தில் இது நடக்கவில்லை.இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.


இதற்கிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொகலகாமா, அமெரிக்க தூதர் பாட்ரிகா புடெனிசை நேற்று சந்தித்தார். அப்போது பொகலகாமா கூறுகையில், ""ராஜபக்ஷே அரசை அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வெளியான தகவலை இலங்கை நம்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு நீடிக்கிறது,'' என்றார்.

ராஜப‌க்ச‌‌வுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் குமரன் பத்மநாதன்











இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிய வ‌ந்து‌ள்ளது. தொலைபேசி மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூற‌ப்படு‌கிறது.

அத்துடன், எதிர்வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு ஜனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவ‌ந்து‌ள்ளது.

சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெ‌ரிய வந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக