21 பிப்ரவரி, 2010

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தல்-


கொழும்பு கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர, மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருக்கும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நான்கு வாரங்களுக்குள் விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற பிரதிச் செயலாளர் டபிள்யூ பி.டீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரிந்துகொண்டு 16 யுவதிகளுடன் தவறாக நடந்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு விளக்கமறியல்-

கொழும்பு இரத்மலானைப் பிரதேசத்தில் வைத்து அங்குள்ள நிறுவனமொன்றில் தொழில் புரியும் 16யுவதிகளுடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிலிப்பைன்ஸ் பிரஜை இரத்மலானை மாளிகாகந்த வீதியில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டின்பேரில் கல்கிசை பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் கைது-


இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் நேற்று இந்திய கடலோரக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இலங்கை மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளும் இந்திய காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா யாஎலயில் 1000ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் கைது-

கம்பஹா மாவட்டம் யாஎல பிரதேசத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரைப் பொலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நேற்றிரவு மேல் மாகாண குற்றத்தடுப்புப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 30 மீட்கப்பட்டு:ளளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யால எலயிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் என்றும் மற்றையவர் வர்த்தகர் என்றும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான 3366 முறைப்பாடுகள் பதிவு-


கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 3366 முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாலியல் வல்லுறவு, பெண்கள் கடத்தல், பணிபுரியும் வீடுகளில் வன்முறைகளுக்கு உட்படுத்துதல், காயமேற்படுத்துதல் போன்ற வன்முறைகளே பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில் பெண்கள் பலவீனமடைந்துள்ளமையெ இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென்றும், இதன் காரணமாகவே பெண்கள் இலகுவில் வன்முறைகளுக்கு இலக்காக சாத்தியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் இவற்றை தடுக்கமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை விபத்தில் மூவர் பலி, இருவர் காயம், சாரதி கைது-


மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள ஹபரண வீதியில் உள்ள தித்தம்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியிருப்பதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தம்புள்ள பொலீசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் இந்த விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் குழந்தை பாட்டி ஆகியோர் பலியானதுடன், தந்தையும் மற்றொருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் புத்தளத்தில் கைது-


இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் கற்பிட்டி பொலீசாரினால் கைதுசெய்யப்படடுள்ளனர். இவர்கள் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி முகத்துவாரம் தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதுடன், இவர்கள் பயன்படுத்திய படகும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. 70 பொதிகளில் இடப்பட்டிருந்த சிப்பிகளும், நான்கு சந்தேகநபர்களும் கற்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக