13 ஜனவரி, 2010

ஜனநாயகத்தை மீட்கும் இரண்டாம் கட்ட யுத்தத்தில் வெற்றி- சரத் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி உறுதியானதெனத் தெரிவித்த எதிரணி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டில் நம்பிக்கையான மாற்றத்தை உருவாக்குவதற்குரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வர்த்தக சமூகத்தினதும் தனியார்துறையினதும் ஒத்துழைப்பு மிக அவசியமானதெனவும் சுட்டிக்காட்டினார்.
ஊழல் மோசடிகளற்ற புதியதொரு நாட்டை உருவாக்குவதே தனது பிரதான இலட்சியமெனவும் ஊழல் மோசடி காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் எடுத்துக்காட்டினார்.நாட்டின் வர்த்தக சமூகத்தினர், தனியார்துறையினருடனான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரு நூறுக்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தக நிறுவனங்களினதும் சிறிய, நடுத்தர வர்த்தக சமூகத்தவர்களும் தனியார்துறை சார்ந்தோரும் பெரும் எண்ணிக்கையானோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது40 வருட அரசியல் அனுபவம் கொண்டதொரு சக்தியுடன் வெறும் 40 நாள் அரசியல் அனுபவத்துடன் களமிறங்கிய நான் சற்றுத்தயக்கமடைந்தே காணப்பட்டேன். ஆனால், இந்த மிகக்குறுகிய காலத்தில் 40 வருடத்துக்கும் கூடுதலான அரசியல் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது கனவான் அரசியல் செய்யும் நற்பண்புள்ள தலைவர்களுடன் இணையக் கிடைத்தமையால் கிட்டிய தொன்றாகும். அவர்களிடம் ஊழல், மோசடி கிடையாது கைகள் சுத்தமானவையாகவே காணப்படுகின்றன. இவர்களுடன் இணைந்து செயற்படக்கிடைத்தமை எனக்குக் கிடைத்த பாக்கியமாகவே நினைக்கின்றேன்.
இன்று நாட்டில் ஊழல், மோசடி, இலஞ்சம், வீண்விரயம் என்பன எல்லை மீறிப்போயுள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அமைதி, சமாதானம் என்பது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றியைக் காட்டி அரசியல் இலாபம் தேடுவதில் ஒரு தனிக் குடும்பம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. கொழும்பிலிருந்துகொண்டு கத்துபவர்கள் யார். போர்களத்தில் போராடியர்வகள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவர், தனியொரு குடும்பம் இந்த வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதை யாராலும் அங்கீகரிக்க முடியாது.ஊழலற்ற நாட்டை உருவாக்குவதற்காக இந்தப்பெரும் சவாலை ஏற்றுக்கொண்டேன்.
ஜனநாயகத்தை மீள உறுதிப்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகாரம் தனிநபரின் கையில் சிக்கி இருப்பதால் நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. அபரிமிதமான அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுகிறது. அரச சேவை கூட ஊழல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்தத் தேர்தலில் என்னால் வெற்றிபெற முடியும். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை எடுத்துக்காட்டியிருக்கின்றேன். இது எனது இரண்டாம் கட்டப்போர். அதாவது ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர். இதில் நிச்சயம் நான் வெற்றியீட்டுவேன். இந்த வெற்றியினூடாக நாட்டில் புதிய நம்பிக்கையான மாற்றத்தைக் கொண்டுவர முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.
பொருளாதார ஸ்திரத்தை அரசு தனித்து உறுதிப்படுத்த முடியாது. வர்த்தக சமூகத்தின், தனியார் துறையினரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதொன்றாகும். வர்த்தகத் துறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு அதிஉச்ச வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான வசதிகளை நாம் உங்களுக்கு பெற்றுத்தருவோம். போதியளவான ஊக்குவிப்புகளை வழங்குவோம். ஏற்றுமதித்துறையில் காணப்படும் தடைகள் அகற்றப்படும். இறக்குமதித் துறையையும் சீராக்குவோம். உள்ளூர் உற்பத்திகளுக்கு பாதகமேற்படாத விதத்தில் இறக்குமதிக்கான வாய்ப்புகளை விரிவாக்குவோம்.
இன்று முக்கியமாக பேசப்படும் ஒரு விடயம் ஜீ.எஸ்.பி.+ சலுகையாகும். இது விடயத்தில் ஐரோப்பிய சமூகத்துடன் பேசி சாதகமான நிலையைத் தோற்றுவிப்போம். உடனடியாக அதில் காணப்படும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து ஜீ.எஸ்.பி.+ சலுகையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறாக நாட்டில் நம்பிக்கையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வர்த்தக சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பி பொருளாதார வளம் மிக்க நாடாக மாற்றுவதற்கு இதய சுத்தியுடன் பங்களிப்புச் செய்யுங்கள் என்ற கோரிக்கையை உங்கள் முன்வைக்கின்றேன்.
எம்மோடு மனம் திறந்து செயற்பட முன்வாருங்கள். நேர்மையான அரசியல் சக்திகளுடன் நேர்மையுள்ள வர்த்தக சமூகமும் ஒன்றுபட முடிந்தால் நாட்டின் எதிர்காலம் நிச்சயமாக ஒளிமயமானதாக மாறும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக