இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலைமையும் நாட்டின் தற்போதைய சூழலும் கவலைக்குரியவை -பொன்சேகா
உயிர்த் தியாகங்களைச் செய்து, பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கையில் அது மிகவும் கவலையளிக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்ததன் பின்னரும் எனக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனõதிபதிப் பதவியில் அமர்வது, சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல. 30 வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதனை மக்களிடம் ஒப்படைப்பதே எனது பணியாகும் என்றும் அவர் கூறினார்ஜே.வி.பி. கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கொழும்பு07, புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன், விஜித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்களும் மாகாண சபை, பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களும் மற்றும் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,நாட்டின் நலனுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்ற கட்சியாக நான் ஜே.வி.பி.யை காண்கின்றேன். அந்த வகையில், எனது இராணுவ சேவை இன்னும் ஒன்றரை வருடத்திற்கு நீடித்திருக்கக் கூடியதாக இருந்தாலும், சீருடையைக் கழற்றி வைத்து விட்டு மக்களுக்குச் சேவை செய்ய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
இராணுவத் தளபதியும் தான் ஓய்வுபெற்றதன் பின்னர் அவருக்கு வழங்கப்படுகின்ற உடைமைகளை அரசாங்கம் இலஞ்மாகவே கருதுகின்றது. எனக்கு அமைச்சின் செயலாளர் பதவியும், அமைச்சுப் பதவிகளும் தேடிவந்தன. ஆனாலும், அவற்றை நான் ஏற்கவில்லை. பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னரும் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எண்ணியபோதிலும், அது நடைபெறவில்லை.
ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற சுமைகள் ஆகியவை மாத்திரம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமைகளை மாற்றியமைப்பதற்கும், நல்லாட்சி ஒன்றை மலரச்செய்வதற்கும், அதேபோல் அரச சேவை, பொலிஸ் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படுவதற்கும், ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்சம் ஆகியவற்றை இல்லாது செய்வதற்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.எனது இந்தப் பயணத்தில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு எனக்கு இருக்கின்றது. அதன்பஐ, நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி என்ற உத்தியோகபூர்வ பதவி அதிகாரம் இருக்கவேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, வெறுமனே சுகபோகங்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டு, மக்கள் சேவைகளிலிருந்து விலகியிருப்பதை நான் விரும்பவில்லை.
எனக்கென்று இருக்கின்ற பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வில்லியம் கோபல்லாவைப் போல் இருப்பதற்கு என்னால் முடியாது. மக்களுக்குப் பதிலளிக்கக் கூடிய பாராளுமன்றத்தை நிறுவி, அதனூடாக நல்லாட்சியை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இன்று குடும்ப அதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாடு மீட்டெடுக்கப்பட்டது குடும்ப அதிகாரத்திடம் கையளிப்பதற்காக அல்ல.
இந்நாட்டில் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்தே தீருவேன். பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டமைக்குச் சொந்தக்காரன் யார் என்பதற்கு இப்போது விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது தற்போது தேவையற்ற விடயமா கும். அதனை விடுத்து, சகோதரக் கம்பனி இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றமையானது, கவலைக்குரியதாகும். 15 வருடங்கள் நாட்டிலிருந்து விலகியிருந்த ஒருவர் இதற்குத் தகுதியற்றவராவார்.
எனக்கென்று ஒரு கனவு இருக்கின்றது. அதனை நனவாக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது. எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்ததொரு வளம் நிறைந்த நாட்டை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கின்ற நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்தக் கனவாகும்.அரசாங்கமும், அதன் நிர்வாகிகளும் எனக்கு எதிராக எத்தகைய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சட்டத்தை மதிக்கின்ற 95 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, பொது மக்களும் எமது பயணத்தில் இணைந்துள்ளனர். எனவே, உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான எமது இந்தப் பயணத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் கட்சிகளும், அதன் உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு வழங்கும் முகமாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக