8 டிசம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாமெனக்கோரி
ருஹ_ணு பிக்கு பேரவை மனுத்தாக்கல்- முப்படைகளின் முன்னாள் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாமெனக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூஹ_ணு பிக்கு பேரவையினால் இந்தமனு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹ_ணு பிக்கு பேரவையின் பொதுச்செயலாளர் உமாரி கஸ்யப்பதேரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் ஜெனரல் சரத்பொன்சேகா பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இம்மனுவினை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. யுத்த குற்றம் புரிந்த நபராக சர்வதேசரீதியாக காணப்படும் ஜெனரல் சரத் ;பொன்சேகாவுக்கு அதிகமான பாதுகாப்பு வழங்குவதால் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் பாதகமான ஒரு நிலை தோன்றுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டுமென்றும் ருஹ_ணு பிக்கு பேரவையின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் ஆயுத வன்முறை தொடர்பிலான விசேட பிரதிநிதியின்
சந்திப்புக்கள்- இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி மேஜர்ஜெனரல் பற்றிக் கெம்ரட் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மற்றும் அவர் முன்னாள் புலி உறுப்பினர்கள் கல்வி பயிலும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். மற்றும் இன்று அவர் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளரை சந்திக்கவிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து வுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு செல்வாரென்றும் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா இரா.சம்பந்தன் சந்தித்துக்

கலந்துரையாடல்- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமது முடிவினை அறிவிக்காத நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. சிறுபான்மை இனப்பிரச்சினை விடயத்திற்கான தீர்வு, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தேசங்கள் என்பன பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன் ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இது இவ்விதமிருக்க ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களின் கருத்து மற்றும் நிலைப்பாட்டை கேட்டறிந்த பின்னரே தமது கட்சி யாருக்கு வழங்குமென அறிவிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.பி திசாநாயக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி திசாநாயக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் ஊடகவியலாளர் மாநாடொன்றினை நடத்தி தனது இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். ஐ.தே.கட்சியில் தான் வகிக்கும் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவது இழிவான செயலெனவும், ஐ.தே.கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த கவலையடைவதாகவும் குறிப்பிட்ட அவர், வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்யும் ஆற்றல்கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம்
உதயம்- ஐக்கிய தொழிற்சங்கம் என்ற பெயரில் மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாட்டலின்பேரில் நுவரெலியா, ஹற்றன் வெலிஓயா மேற்பிரிவில் இதன் ஆரம்ப வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தரணி எஸ். கிருஸ்ணகுமார் இத் தொழிற்சங்கத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமைக் காரியாலயம் மாத்தளையில் திறந்துவைக்கப்பட்டு இயங்கிவருவதாக தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினரொருவர் கூறியுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நியாயமான முறையில் போராடப்போவதாகவும், சந்தாவை நோக்கமாகக் கொள்ளாமல் தொழிலாளர்களின் நலனுக்காக எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்-வெங்கையா நாயுடு-
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வெங்கையா நாயுடு தமிழகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்தபோது தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பதாக இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்தது. எனினும் இதுவரையில் இந்த உறுதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தமிழர்களின் பிரச்சினை நிறைவடைந்து விட்டதாகக் கருதமுடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வொன்று வழங்கப்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பாக அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த கட்டுப்பணம் செலுத்தினார்-
எதிர்வரும் ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இதனை தேர்தல்கள் திணைக்கள அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த தேர்தல்களின்போது வழங்கப்பட்டிருந்த தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பயன்படுத்தலாம்- கடந்த தேர்தல்களின்போது வழங்கப்பட்டிருந்த தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பயன்படுத்தலாமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கிடையில் சேதமுற்றுள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக மாற்று அடையாள அட்டைகள் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளர். தேர்தல்களின்போது புகைப்படம் கொண்ட அடையாள அட்டைகளை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு- புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் புலி உறுப்பினர்களில் 100பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே.டில். லால்காந்தவின் அனுராதபுர காரியாலயம் மீது தாக்குதல்-

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கே.டில். லால்காந்தவின் அனுராதபுர காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காரியாலயம்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக கட்சிக் காரியாலயத்திற்கு முன்னால் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறெனினும், இந்தத் தாக்குதல்களை எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொலீஸ் சீருடை தரித்த நபர்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை, புத்தளம் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி காரியாலம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் தாக்கியழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் கட்சி காரியாலயம்மீதே மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத குழுக்களே இந்தாக்குதலை மேற்கொண்டிருக்கக் கூடுமென அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக