24 நவம்பர், 2009

பிரபாகரனுக்காக பொங்கிய விழிகள்: கருணாநிதி உருக்கம்

Front page news and headlines today


சென்னை : "ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன' என முதல்வர் கருணாநிதி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அவரது கேள்வி - பதில் அறிக்கை:"மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?

ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில், இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்த போது, ஓர் இரங்கல் கவிதை எழுதினேன். மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல், "புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பிருக்கிறது' என்றவர் தான் அவர்.அப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல துணிவு இல்லாமல் என் மீது பாய்கின்றனரே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதை விட காரணங்கள் இருக்க முடியுமா?

ஜெயலலிதா உட்பட சிலர், நீங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதிவிட்டதைப் போல அறிக்கை விட்டுள்ளனரே?

பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல; கடிதம் அல்ல; அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், "இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் தான், நான் நல்லதை எண்ணி, நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். "பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன்' என சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்குத் துணை போய், நம்மைத் தாக்கி அறிக்கை விடுகின்றனர்.

துரோகிகளுக்கு நீங்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவதாக ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

உண்மை தான். துரோகிகள் யார் எனத் தெரியாமல், அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்.

இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?

இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டு, 20ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. 37 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.இதுதவிர, நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் "டிவி' வழங்குதல், திருமண நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாயில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கான்கிரீட் வீடுகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுவதற்கு, தனியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விலைவாசி உயர்வைத் தடுக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?

தமிழக அரசு 2007ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் சிறப்பு வினியோகத் திட்டத்தின் மூலமாக, பொதுமக்களுக்கு சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்கள், சலுகை விலையில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தைக் காணும் போது, இத்திட்டத்தால் பொதுமக்கள் எந்த அளவு பயன் பெறுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான விலைவாசியைக் குறைக்க, தமிழக அரசு எடுத்த முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக