மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளதுமலையக மக்கள் முன்னணி கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு; பசில் எம்.பியும் பங்கேற்பு மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார். பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும். எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும். மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும். புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும். இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். | ||||||
21 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக