21 டிசம்பர், 2009


விடுதலை புலிகளின் ஆயுதக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது

No Image


தமிழீழ விடுதலை புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் பிறின்ஸஸ் கிரிஸ்டீனா கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

83 மீற்றர் நீளமுடையதும், பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல் , தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.



இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் அரசாங்கம்-ரில்வின் சில்வா

No Image
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையின்படியே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் நாட்டை நேசிப்பது உண்மையானால் தமது அமெரிக்க குடியுரிமைகளை ரத்துச் செய்து காட்டட்டும் பார்க்கலாம் என்றும் அவர் சவால் விடுத்தார்.

ஜே.வி.பி.யின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் கூறியதாவது,

""வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் எதிரணிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தாம் எதிர்கொள்ள உள்ள பாரிய தோல்வியை தடுக்க பொய் பிரசாரங்களை பொது மக்களிடையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச சதிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

ஆனால் அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்தும் சர்வதேச சதிகளுக்கு நாட்டை அடமானம் வைத்துள்ளமைக்குமான ஆதாரங்கள் பல உள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கத் தூதுவர் ஊடாக கைச்சாத்திட்டதன் பிரகாரம் அமெரிக்க படையினர் தமது தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்தக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊடகமொன்றில் வெளியான செய்தியில் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இராணுவ தளபதி உட்பட ஏனைய இராணுவ அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பின்னணியில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது.

அதே போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாட்டை பிரிக்கும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனம் சாதித்து வருகின்றார். இது போன்று பல எழுத்து மூலமான ஆதாரங்களை நாட்டு மக்களுக்கும் காட்ட முடியும்.

தேசப் பற்று என்று கூறிக்கொண்டு நாட்டை பாரியளவில் காட்டிக் கொடுப்பது அரசாங்கமேயாகும். தமது ஜனாதிபதி பதவிக்காகவும் அதிகாரங்களுக்காகவும் யாரையும் ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பவாதிகளின் கூடாரமே இந்த அரசாங்கமாகும். ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை பிரஜை இல்லையென்றால் எவ்வாறு இராணுவ தளபதி பொறுப்பு உட்பட யுத்தத்தின் பின்னரான ஏனைய பல பதவிகளை அரசாங்கம் வழங்க முன்வந்தது? இவ்வாறான செயற்பாடுகளினாலும் பொய் பிரசாரங்களினாலும் அரசாங்கத்தின் உண்மையான தோற்றம் தெரிய வந்துள்ளது.


வியன்னா மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராயவில்லை- சம்பந்தன் எம்.பி. கூறுகிறார்

No Image




யுத்தத்திற்குப் பின்னரான வடகிழக்கை கட்டியெழுப்புவது மற்றும் அப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்ட செயற்திட்டங்களில் புலம்பெயர் தமிழ் மக்களினதும் பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என வியன்னாவில் நடைபெற்ற ஐந்து நாள் மாநாட்டின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வமான முறையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அதுதொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

வியன்னா நகரில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெற்ற வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளின் தமிழ் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட மாநாட்டில் இரா. சம்பந்தன் எம்.பி.யும் பங்குபற்றியிருந்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பந்தன் எம்.பி. இதுதொடர்பில் மேலும் கூறியதாவது:

ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அனுசரணையில் வியன்னாவில் ஐந்து நாள் மாநாடொன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் முதல் தடவையாக சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் சுரேஸ்பிரமேச்சந்திரன் எம்.பி., கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரன், அரசசார்பற்ற நிறுவனமொன்றின் சார்பில் சாந்தி சச்சிதானந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது முக்கியமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான வசதிகள், வடகிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை, வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் புலம்பெயர் மக்களும் பங்கெடுக்க வேண்டும் என இணக்கம் காணப்பட்டது. வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகளும் புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளும் முதல் தடவையாக சந்தித்து பேச்சு நடத்தியமை மிகவும் பயனுள்ள விடயமாக அமைந்தது என்று கூறலாம்.



தமிழ் தேசிய க்கூட்டமைப்பு ஆதரிக்காவிட்டாலும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவர்-அமைச்சர் யாப்பா நம்பிக்கை

No Image


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் என்று நம்புகின்றோம். எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிகின்றது.

எனினும் விரைவில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில் அவர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள் என்று நம்புகின்றோம்.

ஒருவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்தாலும் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஒத்தழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.

காரணம் தமிழ் மக்களுக்கு எமது அரசாங்கம் விடுதலையை பெற்றுக்கொடுத்தது. மேலும் வடக்கு கிழக்கு பகுதிகளை அரசாங்கம் துரித கதியில் அபிவிருத்தி செய்துவருகின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும்போது தமிழ்க் கூட்டமைப்பு இவ்விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என்று நம்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக