21 டிசம்பர், 2009


புலிகளிடையே ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:அலி சாகீர் மௌலானா
No Image



2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என அமெரிக்காவில் தங்கியிருந்து நேற்று நாடு திரும்பியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மௌலானா வலியுறுத்திக் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்ட பின்பு தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அந்நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளிறே வேண்டியிருந்ததாகவும்,ஆனால் தற்போது அப்படியான சூழ்நிலை இல்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தான் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பதால்,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அலி சாகீர் மௌலானா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

" 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்தி விட்டது.இதனால் தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைச் சந்தித்து நாடு திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறும், பாதுகாப்பான நிலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் இலங்கை தூதராலயத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கியிருந்தார்"என்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தியது தமது கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருவது பற்றி அவரிடம் கேட்ட போது,

"ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் இதில் என்னை தொடர்புபடுத்திக் கூறியிருப்பது எனக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல அது அவர்களினது அரசியல் நோக்கத்தை கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தற்போதைய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அன்று பிரிந்திருந்தார்.இந்தப் பிரிவுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.அன்று மோதல் தவிர்ப்புக்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோமே தவிர விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே " என்று பதிலளித்தார் அலி சாகீர் மௌலானா.

இதற்கிடையில் நேற்று நாடு திரும்பியதும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் வழக்குத் தாக்கல்

No Image


பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

குறித்த பத்திரிகை பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டதால், அதற்கு நட்ட ஈடாக நூறு கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன, சண்டே லீடர் வெளியீட்டாளருக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் கோரிக்கைக் கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நட்டஈட்டை வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்கிஸை நீதிமன்றத்தில் பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியை மீறி செய்தி வெளியிட்டமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த டிசம்பர் ஆறாம் திகதியும் 13 ஆம் திகதியும் சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்திகள், பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற் படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடக்கூடாதென கல்கிஸை நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவ்வாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் லால் விக்கிரமதுங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.



சிவாஜி, மயோன் போட்டியிடுவதைத் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஏற்கப் போவதில்லை : கணபதி கனகராஜ்
No Image



நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், மயோன் முஸ்தபா போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தமிழ் -முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சிறுபான்மை இன வேட்பாளர்கள் தமது சொந்த இனத்தின் அபிலாசைகளை மனதிற் கொள்ள வேண்டுமே தவிர, மாற்று வேட்பாளர்களினதோ,நாட்டிற்கு வெளியே இருந்து வருகின்ற அழுத்தங்களுக்கோ களம் அமைக்கும் நோக்கத்தோடு இவ்வாறான இக்கட்டான காலகட்டத்தில் செயலாற்றக் கூடாது.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், மயோன் முஸ்தபா போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக மிக தெளிவான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி முடித்துவிட்டது.

ஒரு புறத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு யுத்தத்தை நடத்திய அதே நேரத்தில் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாக சொல்லிக் கொண்டு சர்வகட்சி மாநாடு, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்பனவற்றில் வெறுமனே காலத்தைக் கடத்திவந்தது. இதன்மூலம் சர்வதேசத்திற்கும் சமாதான விரும்பிகளுக்கும் போக்குக் காட்டி யுத்தத்தின் கொடூரத்தை வெளி உலகத்திற்கு குறைத்துக் காட்டியது.

யுத்தம் முடிவடைந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் கிடப்பிலே போடப்பட்டு விட்டது. திஸ்ஸ விதாரன குழுவின் விதந்துரைப்புகள் தேவையற்றவை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை தமிழ்ப்பேசும் மக்களின் நியாமான அரசியல் அபிலாஷைகளை ஆயுதத்தால் அடக்கி ஒடுக்கவேண்டும் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றி முடித்துவிட்டது.

இந்த நிலையில் திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தம்மை சுதாகரித்துக் கொண்டு எழுவதற்கு முன், அவர்களையே பயன்படுத்தி தேர்தலை வெற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. இதில் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பிரதான காரணம் இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொணாத் துன்பங்களுக்கு ஒரு சிறு ஆறுதலாவது கிடைக்குமென்பதால்தான். நொந்து நூலாய்போன சமூகம் தலை நிமிர்ந்து நிற்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு மலையக மக்களின் வாக்குகள் பயன்படும் என்பது எமது எதிர்பார்ப்பு.

மலையக மக்களினதும், தோட்டத் தொழிலாளர்களினதும் எவ்விதமான எதிர்பார்ப்பையும் இன்றைய ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, ஊழல் பேர்வழிகளாக ஜனாதிபதியினால் இனங்காணப்பட்ட மலையகத் தமிழ்க் கட்சித் தலைமைகளையே தற்போதும் தனது அரசியல் கூட்டாளிகளாகியிருக்கிறார்.

இவ்வாறான மலையக அரசியல்வாதிகள் சரத் பொன்சேகா ஜனாதிபதியானதும் அவருடன் இணைந்து கொள்ளவும் தயாராகவே இருக்கிறார்கள். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தற்போதைய ஆட்சியை மாற்றுவதற்கான மிக சிறந்த தெரிவாக இனங்காணப்பட்டுள்ளார்.

எனவே அவருடைய வெற்றி பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. எனவே மக்கள் பேசும் மக்கள் அனைவரும் ஐதேக பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி சகலரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது." இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.



பிரி. இணை அமைச்சர் இலங்கை வருகை : மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

No Image


இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர் இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளமையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கை அடுத்த பொதுநலவாய உச்சிமாநாட்டை நடத்துவதைத் தடுத்து நிறுத்தினார். அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கடந்த வாரம் பொதுச்சபையில் இலங்கை நிலவரம் குறித்துக் கவலை தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டனின் கலாசார ஊடகப் பிரதிமைச்சர் பென் பிரிட்சோ கடந்த வெள்ளிக்கிழமை உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.

பிரிட்டனின் உல்லாசப் பயணத்துறை இணை அமைச்சரான பிரிட்சோ, இலங்கையில் விடுமுறையைக் கழிப்பதன் மூலம் ஏன் அந்த நாட்டுக்கு ஆதரவளிக்கின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிட்டிஷ் அமைச்சருக்கு இலங்கை முழுவதும் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பிரிட்சோ இலங்கை முழுவதும் செல்ல வேண்டும். பின்னர் தன்னைப் போல் சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்துப் பகிரங்கமாக அதிருப்தி வெளியிடவேண்டும் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ரொஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்சோ இலங்கைக்குச் சென்றால், பிரிட்டிஷ் அரசு அந்நாட்டின் மனித உரிமை நிலவரம் குறித்துப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக